பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை686

921.அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதவருவிக்
குன்றும் பதாதியுந் தேருங் குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினுங் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே.

30


என்றபடி. எனவே, அதனைப் படைக்கவும், காக்கவும் அவர் முயலாமை கூறப்பட்டதாம்.

921. குறிப்புரை: அன்றும் - மாறுபடுகின்ற. பகை - பகைவர்; ஆகுபெயர். அடக்கும் - வெல்கின்ற. பரிமா - குதிரை. மத அருவிக் குன்று - யானை - பதாதி - காலாட்படை. நால்வகைப் படைகளும் இங்குக் கூறப்பட்டன. கம்பர் - ஏகம்பர். நல் நீறு - திருநீறு. நுதல் - நெற்றி. திருநீறு நெற்றியில் இல்லாதவர் சிவன்பால் அன்பில்லாதவரே, அதனால் அவர் பெற்ற செல்வம் அவர் முன்செய்த பசுபுண்ணியத்தால் கிடைத்தது ஆகலானும், பசுபுண்ணியம் நிலையற்றது ஆகலானும் 'அச்செல்வம் நிலையாது' என்றார்.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே, பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று1

என்பதில் கூத்தாட்டோடு உவமிக்கப்பட்டது. பசுபுண் ணியங்களே. சிவனடியார்கட்குச் சிவபுண்ணியத்தால் வரும் செல்வம் சிவபுண்ணியங்கள் நிகழ்தற் பொருட்டுச் சிவனருளால் தரப்படுவதாகலின், 'அஃது என்றும் இருநிலத்தே பொலியும்' என்பதாம்.

நீறில்லா நெற்றிபாழ்2

எனவும்,

நம்ப னடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம்; பேய்க்காம்; பரத்தையர்க்காம் - வம்புக்காம்;
கொள்ளைக்காம்; கள்ளுக்காம்; கோவுக்காம்; சாவுக்காம்;
கள்ளர்க்காம்; தீக்காகுங் காண்3

எனவும் போந்த ஒளவையார் நீதி மொழிகளையும் காண்க. நம்பன் - சிவபெருமான். பம்புக்கு - வாளாத் தொகை பண்ணிக் குவித்தற்கு. பம்புதல் - நிரப்புதல், பேய்க்கு - புதைத்து வைத்தபின் பூதம் காத்தற்கு. வம்பு - அடா வழக்கு. கொள்ளை - கூட்டக் கொள்ளைக்காரர் செயல். கள்ளர் - ஒளிந்து நின்று களவு செய்பவர்.


1. திருக்குறள் - 332.
2. நல்வழி
3. தனிப்பாடல்.