922. | நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம் வலத்திமைப் போதும் பிரியார் எரிவளர்த் தாலும்வெற்பன் குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பங் கூடித்தொழும் நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே. | | 31 |
கோ - அரசன் உரியவர் இல்லாத காரணத்தாலும், புதையலாகக் கிடைத்தலாலும் சிலரது பொருள்கள் அரசனுக்கு உரியதாகும். இதனை "உறுபொருள்" -1 என்றார் திருவள்ளுவர். சாவுக்கு ஆம் - வலிந்து பறிக்கும் கள்வர் செய்யும் கொலைக்கு ஏதுவாம். முரசு - வெற்றி முரசு. 922. குறிப்புரை: நிலத்து இமையே - பூசுரர்; அந்தணர். தலை - தலைமை; அது குடிச் சிறப்பாம். மறை - வேதம் அங்கம் - வேதாங்கம். வலத்து - வலிமை பெற்று. 'வல்லராய்' என்றபடி "பிரியம்" என்பதை முற்றெச்சமாக்கி அதனை, "வளர்த்தாலும்" என்பதனோடு முடிக்க. "வளர்த்தாலும்" என்னும் உம்மைச் சிறப்பு. 'குலத்து உதித்த' என ஒருசொல் வருவிக்க. ஏகம்பம் - ஏகம்பர் எழுந்தருளியிருக்கும் இடம். கூடி - அடைந்து. நலம் - நன்மை; ஞானம் அஃது அதனாலாகிய செயலைக் குறித்தது. 'நலத்துக்கண்' என ஏழாவது விரிக்க. அமையாதவர் - பொருந்தாதவர். 'வேட்டுவர்தம் படையின் நடு' என மாறிக் கூட்டுக. நடுவண் நிற்பவரை 'நடு' என்றது ஆகுபெயர். 'நிலத்து இமையோராயினும் ஏகம்பம் கூடித் தொழும் நலத்துக்கண் பொருந்தாதவர் வேட்டுவருள் தலையாய வேட்டுவர்' - என்பதாம். வைதிக அந்தணர்கள் வேள்வியிற் செய்யப்படும் கொலையை, 'கொலையன்று' என விலக்குதல், சிவபெருமானை முன்னிட்டுச் செய்யின் ஓராற்றா லேனும் அமைவுடையதாம்; அவ்வாறு செய்யாதவழி அவர் வேள்விக்கண் செய்யும் கொலைக்கும், வேட்டுவர் செய்யும் கொலைக்கும் இடையே யாதும் வேறுபாடில்லை' என்பதாம். கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர், புன்மை தெரிவா ரகத்து என்னும் திருக்குறளின் உரையில் பரிமேலழகர் "கொலை வினையர் - என்றதனால், அத்திருக்குறளில் வேடரும், அவரோடு ஒப்பவரும் செய்யும் கொலை கடியப்பட்டதன்றி, வேள்விக்கண் செய்யப்படும் கொலை விலக்கப்பட்டிலது' என்பதுபட உரை கூறினார். அக்கருத்துச் சிவனை முன்னிட்டுச் செய்யப்படும் வேள்விக்கே ஓராற்றால் பொருந்தும்' என்பது இங்குக் கூறப்பட்டது. பரிமேலழகர் கூறிய கருத்து அவரால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாகாது, வைதிக அந்தணர்களது பழமையான கருத்தே யாதலின் அது பற்றி
1. திருக்குறள் - 756.
|