923. | படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் நடையால் அறிவின்றி நாண்சிறி தின்றி ஓகும் குலத்தில் கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள் உடையான் கழற்கன்ப ரேலவர் யாவர்க்கும் உத்தமரே. | | 32 |
இவ்வாசிரியர் இங்ஙனம் அருளிச் செய்தார். இதனால் திருநெறியின் முறைமை இனிது விளங்குவதாம். "தலையாய்ப் பிறந்தும்... வேட்டுவர்" என்ற தனால், "பிறப்பு ஒழுக்கங் குன்றக் கெடும்"1 என்றல் பொருந்தாது; பிறப்பு என்னும் பிறப்பே" - என்று பிணங்கு வாரது கூற்றும் தகர்க்கப்பட்டதாம். 923. குறிப்புரை: இப்பாட்டு, முன் பாட்டின்பொருட்கு மறுதலையாய் பொருளை வற்புறுத்துகின்றது. படை - கொலைக் கருவி "கொன்று தின்று" என்றது; கொல்லுதல், தின்னுதல் ஆகிய இரண்டினுள் ஒன்றே செய்யினும் பாதகமாயினும், இரண்டையுமே செய்து' என்றபடி. பசுக்கள், ஆறாவது அறிவில்லாமை பற்றி வந்த உவமை. 'ஆறாவது அறிவு உண்டு' என வாதிக்கின், "பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாமையால்" 'அஃது இருந்தும் பயனில்லை' என்பார். "மாக்களே பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாது பிற உயிர்களைக் கொன்று தின்னும்' என்பது கருத்து. அறிவுளதாயினும் இக்காரணத்தால் - அறிவிலர் - என நல்லோரால் பழிக்கப்படுதல் பற்றிச் சிறிதும் நாணம் உறாமல் தாம் செய்வதே செய்வர் - என்றற்கு, "நாண் சிறிதின்றி" என்றார். 'சிறிதும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது. 'நாண் இன்மையும் மாக்களது இயல்பே' என்றபடி. 'இக்காரணங்களால் இகழப்படும் குலம்' என்றற்கு "நகும் குலம்" என்றும், 'அவற்றுள்ளும் கடைப்பட்ட குலம்' "கடை யாய்ப் பிறக்கினும்" என்றும் கூறினார். யாவர்க்கும் உத்தமர் - யாவரினும் மேலானவர். "அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே" - என அருளிச்செய்தது காண்க. இறுதிக்கண் "கடையாய்ப் பிறக்கினும்" என உம்மை கொடுத்து ஓதியதனால், 'மேற் கூறப்பட்டனவேல்லாம் கடியப்படாதன அல்ல; கடியத் தக்கனவே' என்பதும், 'அவற்றைக் கடிந்து, ஆளுடையான் கழற்கு அன்பாராதல் பொன்மலர் நாற்றமுடைத்தாய வழிப் பெரிதும் பயன்படுதல்போலப் பயனுடையராகச் செய்யும்' என்பதும், 'அவற்றைக் கடியாது ஆளுடையான் கழற்கு அன்பராயின் பொன்மலர் நாற்றம் உடைத்தாகாதாயினும் பொலிவுடைத்தா மாறுபோல ஆவர்' என்பதும் கூறியவாறாம். "ஆ உரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்" என அப்பரும் உம்மை கொடுத்தே ஓதியருளினமை காண்க. மற்றும்,
1. திருக்குறள் - 134.
|