பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை710

972.பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராவொருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே.

81

973.கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற விமானமுந் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே.

82

974.ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாள்அவர் தன்மனை ஆயிழையே.

83


972. குறிப்புரை: "பொலி நுதலாய்" என வந்தமையால் இப்பாட்டினைத் தலைவன் தலைவிக்குப் பதி பரிசு உரைத்த தாகவே கொள்க. பொலி - விளங்குகின்ற. பணை - வயல்கள். வயல்களில் பாசியும், நீர்ச் சேம்பும் அடர்ந்திருத்தல் வானத்தில் கருமுகில் படிந்தது போலக் காணப்படுகின்றது. கரா ஒருத்தல் - ஆண் முதலை. பொருதல் - தாக்குதல். 'பொருவதாக, அதனைப் பார்' என்க. 'கச்சியின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

973. குறிப்புரை: "மகிழ் திரு ஏகம்பர் தேவி மகிழ" என்பதை முதலிற் கொள்க. 'ஏகம்பர் மலைமகளுக்கு அருள் புரிந்தது, - அவள் தம் தேவி - என்னும் அன்பு பற்றி' என்றற்கு, "தேவி மகிழ" என்றார். "மலைமகள்கண்" என்பதில் கண், ஏழனுருபு. ஆர - பொருந்த. 'வைத்தார்' என்பது எதுகை நோக்கி, "வைச்சார்" என மருவிற்று. 'விண்ணோரும், விச்சா தாரும் தொழுகின்ற அவள் விமானமும்' என்க. பரப்பு - நிலப் பரப்பு. ஆங்கு - அப்பரப்பின்மேல் மாடங்கள் - மேல் மாடங்கள். இதனால் கச்சிக் காமக் கோட்டத்தது சிறப்பு உணர்த்தப்பட்டது.

974. குறிப்புரை: ஊரகம் - உலகளந்த பெருமாள் கோயில். பாடகம் - பாண்டவ தூதப் பெருமான் கோயில், இவை கச்சியில் உள்ளவை. தெவ் - பகை; பகைவர்; அசுரர். இரிய - தோற்று ஓட கன்னி - துற்கை. மற்று அசை அவர் - மேலெல்லாம் சொல்லி வருகின்ற கம்பர். வான் கவிகள் - தெய்வப் புலவர்கள். தாங்கிய நாடு - உயர்ந்துக் கூறிய உலகம் அது சத்தி தத்துவ புவனம். அதில் இருந்தவள் சத்தி. "அரி" என்பதை "ஓங்கின" என்பதனோடும் கூட்டுக. 'அரி ஓங்கின (நின்ற கோலமாய் உள்ள) ஊரகம் (அவர்