| 975. | இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி வழியின்வந்த பிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கலுன்னும் நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத் தழையார் பொழில்உது பொன்னே நமக்குத் தளர்வில்லையே. | | 84 |
| 976. | தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக் கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார் வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி உளரா வதுபடைத் தோம்மட வாயிவ் வுலகத்துள்ளே. | | 85 |
கச்சியில்) உள்ளகம்; ஓர் உட்பகுதி. அரி உறைகின்ற (இருந்த கோலமாய் உள்ள) பாடகம் உம்பர் உருகிடமாம். பாங்கினில் (கச்சியில் ஒருபக்கத்தில்) நின்றது. தெவ் இரிய வாங்கின வாளையுடைய கன்னி அவர் மைத்துனி. (மனைவியின் தங்கை) எல்லாப் புவனங்கட்டுகும் மேலதாகிய சத்தி தத்துவ புவனத்தில் உள்ள சத்தி அவருக்கு மனைவி. (அவர் சத்தி தத்துவத்திற்குமேல் உள்ள சிவ தத்துவ புவனத்தில் இருப்பவர்.) இங்ஙனம் திருவேகம்பரது பெருமை விளக்கப்பட்டது. சத்தியை 'மனைவி' என்றதனால் அவர் அத்தத்துவத்திற்கு மேலே யிருத்தல் குறிப்பால் உணர்த்தப்பட்டது. 975. குறிப்புரை: இதுவும் உடன் போக்கு இறுதியில் தலைவன் பதிபரிசு உரைத்தது "பொன்னே" என்பதை முதலிற் கொள்க. பொன் இலக்குமி. இஃது உவமையாகு பெயராய்த் தலைவியைக் குறித்தது. 'இன்ன பிறங்கல் நம் பிராட்டியது; உது சூலத்தள் பொழில்; (ஆதலின்) நமக்குத் தளர்வில்லை' என முடிக்க. இழை - அணிகலம். ஆர் - நிறைந்த. 'இழையாக அணி' என ஆக்கம் வருவிக்க. சத்திக்குச் சொல்வதும்போலச் சிவனுக்கும் வலக் கண்ணில் திருமகளையும், இடக்கண்ணில் கலைமகளையும், நெற்றிக் கண்ணில் ஞானமகளையும் தருதல் கூறப்படும். ஞானமகள் சத்தியின் கூறே ஆதலாலும், சத்தி மலைமகளாகச் சொல்லப்படுதலாலும், "இன்ன பிறங்கல்" என மலையை, "நம் பிராட்டியது" எனவும், 'காடுகிழாள் மாயோன் தங்கை' என வைத்து 'மாயோள்' எனப்படுதலின் கடுக்கைப் பொழிலை, (கொன்றைச் சோலையை) "திரிசூலத்தள் பொழில்" என்றும் கூறினான். பிறங்கல் - மலை. 976. குறிப்புரை: இப்பாட்டும் முன் பாட்டின் துறையதே. "ஈங்கு" என்பதை "மடவாய்" என்பதன் பின்னர்க் கூட்டி, அவ்விரண்டையும் முதலிற் கொள்க. கிறி படுத்தார் - பொய்யை உண்டாக்கினார். தடத்தங்களெல்லாம் இறைவனது நாடகமாகக் கூறுதல் பற்றி ஏகம்பர் உமையது வளைத் தழும்பைப் பெற்றதைத் தலைவன் "கிறி" என்றான். கிளை - இனம். 'கிறிபடுத்தாரது ஏகம்பம் இது. இங்கு வந்து இதனை இறைஞ்சினமையால் நாம் இவ்வுலகத்துள்ளே உளர் ஆவதன் (வாழ்வதன்) பயனைப் படைத்தோம்' என முடிக்க. மற்று, அசை.
|