990. | காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம் ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதவெம்மைப் பூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப் பாட்டிவைத் தார்பர வித்தொழு வாமவர் பாதங்களே. | | 99 |
991. | பாதம் பரவியொர் பித்துப் பிதற்றினும் பல்பணியும் ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தெனவே போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும் வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே. | | 100 |
திருச்சிற்றம்பலம்
990. குறிப்புரை: இஃது ஆசிரியர் திருவேகம்பர் தமக்குச் செய்த திருவருளை வியந்து போற்றியது. 'காதல் வெள்ளம் ஈட்டி வைத்தார் தொழும் ஏகம்பர், ஏதும் இலாத எம்மை, யாம் தம்மைக் கடிப் பூப்பெய்யக் காட்டி வைத்தார்; அன்பு பூட்டி வைத்தார்; அது பெற்றுப் பதிற்றுப் பத்துப் பாட்டு இவைத் தார்ப் பரவி அவர்பாதங்கள் தொழுதாம்' என இயைத்துக் கொள்க. காதல் வெள்ளம் ஈட்டி வைத்தார், திருத்தொண்டர்கள். ஏதும் இலாத - நல்லது ஒன்றும் இல்லாத கடி - நறுமணம். "பூப்பெய்ய" என்பது 'பூசிக்க' என்னும் பொருட்டாகலின் அது. "தம்மை" என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. காட்டி - அறிவித்து. பூட்டி - பூண்பித்து. அது - அவ்வன்பை "பதிற்றுப் பத்து" என்பது 'நூறு' என்னும் பொருட்டு. நூறு பாட்டாகிய இவையாகிய தாரால் (மாலையால்) அவர் பாதஙகளை யாம் பரவி (துதித்து)த் தொழுதாம்' என்க. 'யாம் அறிவையும், அன்பையும் பெற்று அவரைப் பூசித்ததும், நூறு பாடல்களாகிய பாமாலையால் அவர் பாதங்களைப் பரவித் தொழுததும் எல்லாம் அவர் செய்விக்கவே' என்றபடி. 'வைத்தல்' என்பது துணை வினையாகலின், "காட்டி வைத்தார்" முதலிய மூன்றும் ஒருசொல் நீர்மைய! 991. குறிப்புரை: இப்பாட்டு, 'இப்பிரபந்தத்தை அடியார்கள் ஏற்றருள வேண்டும்' என அவையடக்கம் கூறியது, அடியார் ஏற்ற பின்பே ஆண்டான் ஏற்பன் ஆகலின், பாதம் பரவி - தமது பாதங்களைத் துதிக்கும் துதியாக. ஒர் பித்துப் பிதற்றிதும் - பித்தன் ஒருவன் பிதற்றுதல் போலச் சிலவற்றைப் பிதற்றினாலும், 'அது குற்றம் ஆகாதபடி அருள் செய்பவர் திருவேகம்பர்' என்பதாம். இதனை, "முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்"1
1. கந்தர் அலங்காரம் - 22.
|