பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை728

உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
5செய்வினை உலகிற் செய்வோய் எனினும்

அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்

10சேய்மையும் நாள்தொறும்

என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவம்

15துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.

5


உள்ளங்கள் யாவும் உனது உறைவிடங்களேயாதல் உண்மையாய் இருக்கவும், அவ்வுள்ளங்கள் அறியாதவாறு கரந்து நிற்கும் கள்வன் ஆகின்றனை நீ. உலகில் நிகழும் தொழில்களையெல்லாம் செய்பவன் நீயேயாதல் உண்மையாய் இருக்கவும், அத் தொழில்களால் விளையும் பயன்களுள் ஒன்றும் உன்னைப் பற்றாதவாறே அவற்றிற்குப் பற்றாகின்றனை நீ அடியார் கூட்டத்துள் நின்று உனது இன்பத்தினை விரும்பி உன்னை வணங்குகின்றவர்களது உள்ளங்களில் அந்த இன்பமாகவே விளைகின்றவன் நீ. உயிர்கள் யாவும் இனத்தால் ஒன்றாயிருந்த போதிலும் உன்னை அடைந்தவர்க்கு அண்மையனாயும், அடையாதவர்க்குச் சேய்மையனாயும் இருக்கின்றவன் நீ. இத் தன்மைகளை எண்ணிப் பார்க்கின் இவை அங்ஙனம் எண்ணிப் பார்ப்பவரது எலும்பையும் உருக்கும். ஆகவே, இத் தன்மைகளை உணர்ந்தவர்கட்கே ஊன் உடம்பு அற்றொழியும் நிலைமை, (பிறவா நிலைமை) உண்டாகும் என யாம் உணர்ந்தேம்' என்பது இப்பாட்டின் பொருள். மற்று இரண்டும் அசைகள். துயக்கம் - கலக்கம். சூழல் - சூழ்நிலை. கறைபட - குற்றம் உண்டாக. இனம் - அடியார் கூட்டம். வாரி - வெள்ளம்; அல்லது கடல். வனப்பு, இங்கே சிறப்பு. அணிமையனை "அணிமை" என்றும், சேய்மையனை "சேய்மை" என்றும் கூறியன உபசார வழக்கு. காண்டல் - உணர்தல். "மன்னிய பெரும் புகழ்" என்பது மதியணிந்தவ னாகிய இறைவனைச் சிறப்பித்தது. சந்திரன் இறைவன் திருமுடிமேல் இருக்கப்பெற்று தவத்தினால் ஆகலின் "மாதவம் துன்னிய தூமதி" என்றார். 'செஞ்சடைக்கண் மாதவம் துன்னிய தூமதியோய்' என்க.