(தனி ஒரு பொருளேயாகிய நீதானே) ஒருகால் 'சிவம்' என அஃறிணையாயும், ஒருகால் 'சிவன்' என உயர்திணை ஆடூவாயும் ஒருகால், 'சிவை' என உயர்திணை மகடூவாயும் சொல்ல நிற்றல், 'உலகப் பொருள் அனைத்திலும் ஒருபடித்தாக நிறைந்து நின்று அவற்றை அவ்வவ் வழியில் இயக்குபவன் யான்' என்பதை அறிவிப்பதாம். மதி, கதிர், தீ (சோம சூரியாக்கினி) மூன்றையும் மூன்று கண்களாகக் கொண்டது 'அந்தணர்கள் வேட்கும் முத்தீயும் எனது கண்ணொளிக்கூறே' என்பதை உணர்த்துவதாம். நான்கு கால்களை உடையதாய், ஒலிக்கும் தன்மையுடைய மான் கன்றைக் கையில் பிடித்துள்ளது, 'நான்கு பகுதியதாய 'வேதத்திற்குக் கருத்தா யான்' என்பதைத் தெரிவிப்பதாம். முனை மூன்றாய், அடி ஒன்றாய் உள்ள சூலத்தை ஏந்தியிருப்பது, 'மூவர் மூர்த்திகட்கும் முதலாய் உள்ள ஒருவனாகிய இறைவன் நான்' என்பதை அறிவுறுத்துவதாம். அட்ட மூர்த்தியாய் இருத்தல், 'மாற்றம் உடைய அனைத்து உலகப் பொருட்கும் மாற்றம் இன்றி நிற்கும் அடிநிலைப் பொருள் நான்' என்பதை தெளிவுப்படுத்துவதாம். ஈங்கு இவை முதலாம் வண்ணமும், வடிவும் 'நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும் தானேயாய், மற்றும் முதற் பொருளின் இயல்புகள் பலவற்றையும் உடைய இறைவன் நீயே' என்றும், 'அது, பூத நாதனாய் நிற்குமாற்றானே அறியப்படும் என்றும் தெளிவுபட வேதம் முதலிய நூல்கள் பலவும் ஒருபடித்தாக வெளிப்பட எடுத்துக் கூறுகின்றபடியே உனது பெருமைகளை உணர்த்தும் சிறப்பு அடையாளங்களாய் நின்று உணர்த்தவும் உணராது பிணங்கி நிற்போர், தமக்குத் தாமே கேடு சூழ்ந்து கொள்ளும் தற்கேடரே யாவர். அவர் தாம் (நல்ல போலவும், நயவ போலவும்) கூறும் சொல்லிலும், பொருளிலும் அகப்பட்டு மயங்குவார் மயங்காதபடி வேதத்தை வன்மையாக உணர்ந்த அந்தணர்கள் பலர்க்கும் தெளிவுபட ஓதும் வேத முழக்கம் என்றும் நீங்காது ஒலிக்கின்ற திருவொற்றியூரில் உள்ள பெருமானே! நீ மேற்கூறிய பிணக்குரையாளர்கள்) பிணக்குரையை உன் முன்னே கூறும்பொழுது, நீ (நடை வழியை 'சிறந்த மாட மாளிகை' என்றும், மணலை 'சோறு' என்றும் சொல்லிக் களிக்கின்ற) 'சிறுவர் செயலோடு ஒப்பது' என்று கருதிப் புன்முறுவல் பூத்திருக்கின்றாய் போலும்' என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். "ஓதி ஒர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன"1 என்று அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியின்படி. வேதாகமங்களை ஓதியுணர மாட்டாத எளியோர்க்கும், வேதாகமங்களை ஓதியபோதிலும் அதன் உண்மையுணர மாட்டாதவர்க்கும் சிவபெருமானது பெருமைகளை இனிது விளக்கி நிற்பனவே அவனது திருமேனியிற் காணப்படும் சிறப்பு
1. திருமுறை - 3.25.2.
|