பக்கம் எண் :

733திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

என்பதாம்.) பிறப்பை, 'பிறவி' என்றல் போலத் துறவை, 'துறவி' என்றலும் வழக்கு. தொடர்ச்சி - இயைபு. முன்பு வேறாய் இருந்து, பின்பு பிற பொருள்களோடு தொடர்பு கொள்ளாமல் அனாதியே எல்லாப் பொருளிலும் இயைந்து நிற்கின்றாய்; யாதொரு நுகர்ச்சியையும் உயிர்கள் நுகர்தற் பொருட்டு அவைகளோடு உடனாய் நின்று, அவை நுகர்வன வற்றை நீயும் நுகர்கின்றாய் எனினும், அந்நுகர்ச்சியால் நீ தாக்கப்படாது நினது இயல்பிலே நிற்கின்றாய். படி முறையால் வளர்ச்சியடையாது இயல்பாக விரிந்த விரிவினை உடையையாதல் போலச் சிறிது சிறிதாகத் தேய்ந்து நுணுகாது இயல்பிலே அணுவினும் அணுவாய் நுணுகி நின்றாய்; உயிர்களின் மன வாக்குக் காயங்களுக்கு முன்னர் அகப்படும் பொருளாய் இருந்து, பின் அகப்படாமல் நீங்கினையாகாது, இயல்பிலே அவற்றைக் கடந்து நிற்கின்றாய். அஃதேபோல, முன்பு செய்மைப் பொருளாய் இருந்து, பின்பு அண்மைப் பொருள் ஆகாது இயல்பிலே அண்மைப் பொருளாய் நிற்கின்றாய். இவ்வாறே நீ ஒன்றையும் செய்யாமலே எல்லா வற்றையும் செய்தலையும், ஒரு காலைக்கொருகால் சிறந்து சிறந்து நில்லாது இயல்பாகவே எல்லாப் பொருளினும் மேலாகச் சிறந்த சிறப்பினையும் உடையவன் ஆகின்றாய். வெப்பத்தை உடையனவாய், அது பொழுது தட்பத்தை உடையவனாயும், திண்மையுடையவனாய், அதுபொழுதே நொய்ம்மையை உடையவனாயும் இருக்கின்றாய்; இன்னும் எப்பொருளாயும் படைக்கின்றாய்; பின்பு அழித்து விடுகின்றாய். கூடியிருக்கும் பல பொருள்களை வேறு வேறாக்கி நீங்கச் செய்கின்றாய்; அதனோடு வேறு வேறாய் நீங்கி நிற்கின்ற பொருளாய் ஒன்றாய்த் தொகுக்கின்றாய், நின்ற பொருளி னின்றும் நீங்குகின்றாய்; (இஃது அப்பொருள் கேடுறுதற் பொருட்டு, "கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் - உடலினார் கிடந்து ஊர்முனி பண்டமே"1 என்னும் அப்பர் வாக்காலும் அறியப்படும்.) நீங்கினின்ற பொருளோடு சேர்கின்றாய். (இஃது அப்பொருள் ஆக்கம் பெறுதற் பொருட்டு. எண்ணில் பல்குணம் - ஓர் இனப்படுத்த இயலாத பல்வேறான தன்மைகள் மயக்குதல் - ஐயத்தைத் தோற்றுதல். உணர்வு ஒருதலைப்படாது பலதலைப்படச் செய்தல். ஈங்கிது - இத்தன்மைத்தாய் இது. மொழிவார் யார் - ஒருதலைப்பட அறுதியிட்டுச் சொல்பவர் யாவர்? 'ஒருவரும் இலர்' என்றபடி. "தாம்" என்னும் அசைச்சொல் அளபெடை பெற்று வந்தது. இவ்வாறெல்லாம் 'மெய்ப்பொருள் இன்னது எனச் சொல்ல வாராத அநிர்வசனப் பொருள்' என்பது கருத்தன்று - என்றற்கு,

சொல்நிலை சுருங்கி னல்லது
நின்னிலை அறிவோர் யார் இருநிலத்தே


1. திருமுறை - 5.90.4.