பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை736

எதிர்பாராத தீவு எதிர்ப்படின் மரக்கலத்தைப் பின்னோக்கிச் செலுத்துவர். சுழல - திரும்ப. முழக்குடைத் துளை, நவத்துவாரங்கள். கண்டம் - திசை திருப்பும் கருவிகள். சால் - உள் அமைப்பு. முகம் - முன்னோக்கும் பகுதி. மூக்கு ஆறு - மூக்கின் வழியாக விட்டு வாங்கும் மூச்சு. ஓதம் - அலை; அஃது ஆகுபெயராய், அதன் ஓசையைக் குறித்தது. இப்பரிசு இயற்றிய - 'இத் தன்மைத்தாக இயற்றப்பட்ட உடல்' என்க. துப்புரவு - நுகர்ச்சிப் பொருள். கூம்பு - பாய்மரம். ஆர்த்து - பொருத்தி, "கயிற்றிடை" என்பதை, 'கயிற்றினால்' எனத் திரிக்க. அறுக்கப்படுவதாகிய கயிறு, நின்று நீக்கப்படும் துறையின்கண் பிணித்து வைத்துள்ள கயிறு. ஒருமை - மன ஒருமை. பொறி - மரக்கலத்தை வேகமாகச் செலுத்தும் யந்திரம். பார் - பாறை; கடலுள் இருப்பவை. கடுவெளி - கொடிய இடம். இது மரக்கலம் உடைதற்கு ஏதுவாம் ஆதலின், இஃது உள்ள இடம் 'கொடிது' எனப்பட்டது. அகற்ற - இந்த இடத்தைத் தெரிந்து மரக் கலத்தை அப்பாற்படுத்தற்பொருட்டு தூமம் - நறும் புகை. சோதி - விளக்கு. இவை வழிபாட்டுப் பொருள்கள். 'தூமத்தோடு கூடிய சோதி என்க. மரக்கலத்தை வழி தெரிந்து இயக்க அதன்கண் விளக்கு ஏற்றப்படும். உணர்ச்சி - மெய்யுணர்வு. துழாவுதல் - தண்ணீரை ஒரு முகமாகத் தள்ளுதல், "அளவில் கரை" என்றது 'அளவின்றி நீண்ட கரை' எனப் பொருள் தந்தது. "கரை" என்றது 'வீடு' என்பது தோன்ற அளவின்றி நீள்கரை" என்றமையின், இது குறிப்புருவகம் 'துடுப்பினைத் துழாவி நெருங்கிச் சென்று உயிரைக் கரை ஏற்றும்படி ஆங்கு அவ் யாத்திரை போக்குதிபோலும்!' என முடிக்க. போக்குதி - நிறைவேற்றுவாய். போலும், உரையசை. "ஆகி" என்னும் செய்தென் எச்சம் "அடிப்ப" என்பதனோடும், "அடிப்ப, வெளுப்ப" முதலிய செயவென் எச்சங்கள் பலவும் "இயற்றிய" என்பதனோடும், "நிறைந்து, முழங்கி" என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய், "எறிய" என்பதனோடும், "அடைந்து" என்னும் செய்தென் எச்சம் "சுழல" என்பதனோடும், "வணங்கி, நிறுத்தி" முதலிய செய்தென் எச்சங்கள், "நெருங்கா" என்னும் செய்யா என் எச்சத்தோடும், அது "ஏற்ற" என்னும் காரியப் பொருட்டாய செயவென் எச்சத்தோடும், அது "போக்குதி" என்பதனோடும் முடிந்தன. இடையில் "தலைப்பட்டு" என்பதில் 'தலைப்பட்டும்' என இழிவு சிறப்பும்மை விரித்து, அதனை, "பெற்றவர்" என்பதனோடு முடிக்க.

இவ்வாற்றால், 'இடர்ப்பாடு மிக்க உடம்பினுள் தங்கி, இடர்ப்பாடான வாழ்வில் நின்றும் இறைவனது திருவருளைப் பெற்றவர் அவனது திருவடியைத் துணையாகப் பற்றி அவனது பணியிலே நின்று தம் உயிரை வீடுபேற்றிற்கு உரித்தாக ஆக்கிக் கொள்ள முயல்வர்" என்பதும், 'அவர்கட்கு இறைவன் துணை நின்று அவர்களது முயற்சி வெற்றிபெறச் செல்வன்' என்பதும் கூறப்பட்டன.