133. | கூறெமக்கீ தெந்தாய், குளிர்சடையை மீதழித்திட்(டு) ஏற மிகப்பெருகின் என்செய்தி? - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை. | | 90 |
134. | திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்; - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறனுரைப்ப தென்? | | 91 |
பொடியாக - சாம்பலாகும் படி, நோக்கி - (நெற்றிக் கண்ணால்) பார்த்து. இவ் எச்சம், எண்ணின் கண் வந்தது. தெளிவு - ஞானம். சேர்வாய் - சேர்பவனே, ஒளி நஞ்சம் - ஒளிக்கப்பட்ட விடம், ‘வாயாகிய அஃது’ என்க. அஃது - அவ்வுறுப்பு. இருப்ப - கறைபடாமலே இருக்க. ‘கண்டமும் கறைபடாமல்தான் உள்ளது; ஆயினும் உள்ளிருக்கும் நஞ்சின் கறை வெளித் தோன்றுதலை உலகம் கண்டம் கறைபட்டதாக எண்ணுகின்றது’ என்பதாம். ‘எந்த ஒரு பொருள் இறைவனை மாசுபடுத்துதல் இயலாது’ என்பது குறிப்பு. 133. அ. சொ. பொ.: ‘எந்தாய்’ எனத் தொடங்கி, ‘கங்கை மிகப் பெருகின், அரவும், மதியும் ஈர்த்து ஓடும்; (அப்பொழுது) நீ என் செய்வாய்? ஈது எமக்குக் கூறு’ என இயைத்து முடிக்க. எந்தாய் - எம் தந்தையே. ‘சடையை அழித்திட்டு மீது ஏறப் பெருகின்’ என்க. அழித்தல் - கட்டுக்கு அடங்காது போதல். ‘சீறி விழித்து ஊரும் அரவு’ என்க. தெழித்து - ஆரவாரித்து. திரை - அலை. “என் செய்வாய்” என நகையாடிக் கூறியது, ‘கங்கை என்னும் அவ்வாறு பெருகப் போவது இல்லை’ எனப் பழித்தது போலப் புகழ்ந்தது. 134. அ. சொ. பொ.: உரை - சிவனைப் பற்றிக் கூறும் புகழுரையும், பொருளுரையும் அவை தோத்திர சாத்திரங் களாம். உணர்ந்தோம் - உணரற்பாலனவற்றை யெல்லாம் உணர்ந்தோம். ‘இனி வேறு உரைகள் பற்றி யாம் உணரற்பாலது யாதுமில்லை’ என்பதாம். கண்டீர், முன்னிய யசை. ஒகாரம், அசை. ‘அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம்; இஃது அறியாது, நீவிர் எம்மைப் புறங்கூறுதல் ஏன்’ - என வேண்டும் சொற்கள் வருவித்து முடிக்க. அமைதல் - நிரம்புதல். ஏகாரம்; தேற்றம். புறன் உரைத்தல் - காணாத வழி இகழ்ந்துரைத்தல். அஃதாவது, ‘பித்தனைப் பேணித் திரிகின்றார்’ எனக் கூறுதலாம். இங்ஙனம் கூறுவோர் புறச் சமயிகள் ஆதலின், முதற்கண், ‘புறச் சமயத்தீர்’ என்பது வருவித்துக்கொள்க.
|