135. | என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூர்ச்சடையான், வானோர்க்(கு) அருளாக வைத்த அவன். | | 92 |
136. | அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்; அவன்கண்டாய் அம்பவள வண்ணன்; - அவன்கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால், நன்னெஞ்சே, மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. | | 93 |
137. | விருப்பினால் நீபிரிய கில்லாயோ? வேறா இருப்பிடம்மற் றில்லையோ ? என்னோ ? - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய்; அவள். | | 94 |
135. அ. சொ. பொ.; உடையான் - ஆளாக உடைய தலைவன். ஏகமாய் நிற்றல் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாது தனி முதல்வனாய் நிற்றல். தன்னை அறியாத தன்மையாவது, எத்துணையும் பெரியவனாகிய தனது தன்மையைத் தான் எண்ணாமல், எத்துணையும் எளியவனாய் வந்து அருள் புரியும் குணம். “பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை”1 என்பதிற்போல, அறிதல், இங்கு மதித்தல், “தன்பெருமை தானறியாத் தன்மையன்காண்”2 என்று அருளிச் செய்ததும் இப்பொருட்டு. ‘அருளை வானோர்க்கு ஆகும்படி வைத்த அவன்’ என்க. 136. அ. சொ. பொ.: “அவன்” என்றது முன்னை வெண்பாவிற் சுட்டிய அவனை. ‘என்றும் பிரான் ஆவான்’ என்க. பிரான் - தலைவன். மைத்து அமர்ந்த - மையின் நிறத்தைக் கொண்டு பொருந்திய. இது தேவர் அமுதுண்ணத் தான் நஞ்சை உண்ட கருணையைக் குறித்தது. மற்று, அசை. “நன்னெஞ்சே” என்பதை முதலிற் கூட்டுக. மெய்த்து - மெய்ம்மைப் பட்டு. அஃதாவது, ‘பயன்’ யாதும் கருதாத நிலை யில் நின்று’ என்றதாம். ‘மெய்த்து அமர்ந்த’ என்பதின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ‘மெய்த்து அமர்ந்த அன்பு’ என்றது சிறப்பும், “விரும்பு” என்பது பொதுவுமாய்த் தம்முள் இயைந்து நின்றன. 137. அ. சொ. பொ.: “மஞ்சுபோல் மால் விடையாய்” என்பதை முதலிற்கொள்க. மஞ்சு - மேகம். மேகம் போலும் நிறத்தையுடைய மால், திருமால், விடை - இடபம், ‘திருமாலாகிய இடபம்’ என்பதாம்.
1. திருக்குறள் - 61. 2. திருவாசகம் - திருச்சாழல் - 19.
|