1026. | அருதிக்கு விம்ம நிவந்த(து)ஓர் வெள்ளிக் குன்றமஞ்சு பருதிக் குழுவி யுமிழ்கின்றதே யொக்கும்; பற்றுவிட்டோர் கருதித் தொழுகழற் பாதமும், கைத்தலம் நான்கும்,மெய்த்த கருதிப் பதமுழங் குந்தில்லை மேய சுடரிருட்கே. | | 5 |
1027. | சுடலைப் பொடியும் படுதலை மாலையும், சூழ்ந்தவென்பும் மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும் அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை விடலைக்கென் ஆனைக் கழ(கு)இது வேத வினோதத்தையே. | | 6 |
1026. குறிப்புரை: "பற்று விட்டோர்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. மெய்த்த - திருமேனியால் அமைந்த. சுருதி முழங்கும் சுடர் என இயைக்க. சுருதி - வேதம். அதுவே கூத்துப் பெருமான் காலில் அணியும் சிலம்பு ஆதலின், 'சுருதி பதத்தின்கண் முழங்கும் சுடர்' என்றார். "சுருதிப்பதம்" என்பதில் பகர ஒற்று, எதுகை நோக்கி விரிக்கப்பட்டது. 'பதத்தின்கண்' என ஏழாவது விரிக்க. சுடர், கூத்தப் பெருமான். இருட்கு - இருளை நீக்குதற்கு. 'தில்லை மேயசுடர், இருட்டு மஞ்சு பருதிக் குழவியை உமிழ்க்கின்றதே ஒக்கும்' என இயைத்து முடிக்க. பருதிக் குழவி, இள ஞாயிறு. மஞ்சு - மேகம். சிவபெருமானது திருநீறு நிறைந்த திருமேனிமேல் யானைத் தோற் போர்வையிருத்தலால், 'அத்தோல் வெள்ளி மலைமேல் கவிந்த மேகம் போலவும், யானைத் தோற் போர்வையின் ஊடே ஊடே வெளிப்படுகின்ற சிவபெருமானது திரு மேனியின் ஒளி, இளஞாயிறு வீசும் கதிர்கள்போலவும் உள்ளன' என்பதாம். 'சுடரினுக்கே' என்பது பாடமன்று. 'அருந்திக்கு' என்பதில் நகர ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. திக்கு - திசைகள். விம்ம - நிறையும்படி. நிவந்தது - ஓங்கியது. 1027. குறிப்புரை: "மடலை, அடலை என்பவற்றில் ஐகாரம் சாரியை. அடல் - வெற்றி. அயில் - கூர்மை. மயிர்க்கயிறு, பஞ்ச வடம். இதனை மாவிரதிகள் சிறப்பாக அணிவர். 'அணியாக' என ஆக்கம் விரிக்க. 'குரிசில்' என்பதுபோல 'விடலை' என்பதும் தலைவருக்கு உரிய பெயர். வினோதம் - பொழுது போக்கு. "செலியரத்தை நின் வெகுளி"1 என்பதிற்போல இப்பாட்டின் ஈற்றில் வந்த "அத்தை" என்னும் அசைநிலை யிடைச்சொல், "அத்தின் அகரம் அகரமுனையில்லை"2 எனச் சாரியை இடைச்சொற்கு ஓதிய முறையானே முதலில் உள்ள அகரம் கெட்டு நின்றது.
1. புறம் - 6. 2. தொல் - எழுத்து - உருபியல்.
|