1039. | புகவுகிர் வாளெயிற் றானிலங் கீண்டு பொறிகலங்கி, மிகவுகும் மாற்கரும் பாதத்த னேல்,வியன் தில்லைதன்னுள் நகவு குலாமதிக் கண்ணி,யற்(கு) கங்கண னென்றனன்றும் தகவு கொலாம்,தக வன்று கொலாமென்று சங்கிப்பனே. | | 18 |
சாதி யிரண்டொழிய வேறில்லை ... மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்1 என்றாற்போல இங்கும், 'தவம் செய் சாதி, தவம் செயாச் சாதி என இரு சாதிகளே கொள்ளப்பட்டு, அவற்றுள் 'தவம் செய் சாதி மேற் சாதி, தவம் செயாச் சாதி கீழ்ச் சாதி' எனக் கொள்ளப்படுதல் அறியப்படுதலால் இங்கு, "கடை படு சாதி" என்றது தவம் செயாச் சாதியையேயாயிற்று. 'வேறு சில வினை வயத்தால் அடியேன் அச்சாதியில் பிறக்கினும், இப்பொழுது செய்யும் இவ்விண்ணப்பத்தைத் திருச்செவி சாத்தி நீ அடியேனுக்கு அருளல் வேண்டும்' என்றபடி. கண்டாய், முன்னிலையசை. 'கிங்கிணியை அணிந்தனவும், செம்மையான நிறத்தை உடையனவும் ஆகிய பாதம்' என்றல் கருத்து என்க. 1039. குறிப்புரை: புக - தான் உள்ளே செல்லுதற் பொருட்டு 'உகிராலும், எயிற்றாலும் நிலத்தைக் கீண்டு' என்க. பொறி - ஐம்பொறி. கலங்கி - நிலை கலங்கி. "கலங்கி" எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது. உகும் - மெலிந்த. மாற்கு - திருமாலுக்கு. அரு - காணுதற்கு அரிய. 'நகு' என்னும் முதனிலை 'ஐ' என்னும் இறுதி நிலை பெற்று 'நகை' என வருதல் பெரும்பான்மை. அதற்கு 'வு' இறுதி நிலை புணர்த்து, இடையே அகரச் சாரியை சேர்த்து, "நகவு" என்றார். 'ஒளி' என்பது அதன் பொருள். அற்கு - இருளைப் போக்குதற்கு. அம்கணன் - அழகிய கண்களை உடையவன். அஃதாவது, சூரிய சந்திரனைக் கண்களாக உடையவன். நன்றும் - மிகவும், "கொல்" இரண்டும் ஐயப் பொருள். "ஆம்" 'இரண்டும் அசைகள். சங்கிப்பன் - ஐயுறுவேன். "சிவபெருமான், திருமால் பாதலம் முழுவதையும் குடைந்து கடந்து சென்றும் காணாத பாதங்களை உடையவன் - என்றல் உண்மையானால், - அவன் தில்லைத் தலத்தில் தனது முழுத் திருமேனியையும் யாவரும் காண ஆடுகின்றான் - என்பது உண்மையா, அன்றா? என்று நான் ஐயுறுகின்றேன்" - என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். 'பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளாய், அதே சமயத்தில் சிறிய பொருள்கட்கெல்லாம் சிறிய பொருளாய் நிற்கும் ஓர் அதிசய நிலையே பரம்பொருளது நிலை' என்பதை இங்ஙனம் குறிப்பால் உணர்த்தியவாறு. எனவே, 'இப்பாட்டிற் குறித்த இரண்டுமே உண்மைகள்தாம்' என்பதே விடையாதல் அறிக.
1. ஒளவையார் - நல்வழி.
|