1040. | சங்கோர் கரத்தன் மகன்,தக்கன், தானவர், நான்முகத்தோன் செங்கோல விந்திரன், தோள்,தலை, யூர்,வேள்வி, சீருடலம் அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்; எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே. | | 19 |
1041. | ஏவுசெய் மேருத் தடக்கை யெழில்தில்லை யம்பலத்து மேவுசெய் மேனிப் பிரானன்றி யங்கணர் மிக்குளரே? காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத் தேவுசெய் வான்;வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே. | | 20 |
1040. குறிப்புரை: சங்கு ஓர் கரத்தன், திருமால். அவன் மகன் மன்மதன். தானவர், திரிபுரத்து அசுரர். செங்கோல் - செங்கோலை (வானுலக ஆட்சியை) உடைய - மன்மதன் முதலாகக் கூறப்பட்ட ஐவர்கட்கும், 'தோள், தலை, ஊர், வேள்வி, உடலம்' என்பவற்றை எதிர்நிரல் நிறையாக இயைக்க. சீர் - அழகு. அம் கோலம் - அழகிய தோற்றம். "ஆயிட்டு" என்பதில் இட்டு, அசை. கண் சிவத்தல், கோலக் குறிப்பு. 'கடைக்கண் சிறிதே சிவந்த அளவில் இத்தனையும் சாம்பலாயின' என்றது குணக் குறை பற்றி வந்த விசேட அணி. 1041. குறிப்புரை: ஏ - அம்பு. இஃது ஏவப்படும் காரணம் பற்றி வந்த பெயர். அஃது ஈற்றில் லகர உகரம் பெற்று, "ஏவு" என வந்தது. எனவே, அஃது இரட்டுற மொழிதலாய், 'அம்பை ஏவுதல் செய்கின்ற' எனப் பொருள் தந்தது. இதனால், "மேரு" என்பதும் "மேருவாகிய வில்" என்னும் பொருட்டாயிற்று. "அம்பலம்" என்பது ஆகுபெயராய் அதன்கண் இயற்றப்படும் கூத்தைக் குறித்தது. அம் கண்ணர் - அழகிய கண்ணை யுடையவர். "கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்"1 என்ப ஆகலின், அதனையுடைய கண் 'அழகிய கண்' எனப்பட்டது. ஆகவே, "அங்கணர்" என்பது 'கருணையுடையவர்' என்னும் கருத்தினதாம். "மிக்கு உளரே" என்றாராயினும் 'மிக்க கருணை யுடையவர் உளரே' என்பதே கருத்தென்க. ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர் மறுத்தலையுணர்த்திற்று. 'காளத்திக் கண்ணுதலாய்' என ஆக்கம் வருவித்து, 'வாய்ப் புனல் ஆட்டிய வேடுவனை' எனத் தொகுக்கப்பட்ட இரண்டாவதை வருவித்து, 'வேண்டும் வரங் கொடுத்துத் தேவு செய்வான்' என முடிக்க. தேவு செய்தது ஒரு காலத்தேயாயினும், 'அஃது அவற்கு என்றும் உள்ள இயல்பு' என்றற்கு,
1. திருக்குறள் - 575.
|