பக்கம் எண் :

761கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

1042.வேடனென் றாள்;வில் விசயற்கு வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்;குழைக் காதனென் றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்;தொகு சீர்த்தில்லை யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்;மங்கை யங்கைச் சரிவளை சிந்தினவே.

21

1043.சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கர மென்னும் வழிகள்பெற்றுஞ்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை யம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனியெம் மான்ற னருள்பெறவே.

22

1044.அருள்தரு சீர்த்தில்லை யம்பலத் தான்தன் அருளினன்றிப்
பொருள்தரு வானத் தரசாத லிற்,புழு வாதல்நன்றாம்;
சுருள்தரு செஞ்சடை யோனரு ளேல்,துற விக்குநன்றாம்,
இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.

23


"செய்வான்" என எதிர்காலத்தாற் கூறினார். காவு - கா; சோலை. வாய்ப்புனல் ஆட்டிய வேடுவன், கண்ணப்ப நாயனார் என்பது வெளிப்படை.

1042. குறிப்புரை: இப்பாட்டு தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது. கோடன் - கோஷன். ஆரவாரத்தையுடையவன். ஆரவாரம் - போர்காரணமாக எழுந்தது. சேடன் - பெருமையுடையவன். 'அவ்வளை, கைவளை' எனத் தனித்தனி. இயைக்க. அம் - அழகு. அது 'வளை' என்பதனோடு புணருங்கால் ஈறுகெட்டு லகர ஒற்று மிக்கது. சரி - வளையல்களில் ஒருவகை. "மங்கை" என்பதன்பின், 'அதுபொழுது' என்பது வருவிக்க. இவ்வாற்றால், 'இவளது வேறுபாட்டிற்குக் காரணம் தில்லைக் கூத்தினைக் காதலித்த காதலே' என்பதைக் குறிப்பால் உணர்த்தினாளாம்.

1043. குறிப்புரை: 'சிந்திக்க மனம், உரையாட வாய், மலரால் கழல்கள் வந்திக்கக் கரம்' - என நிரல்நிறையாக இயைத்துக் கொள்க. சந்தித்தல் - சென்று அடைதல். தெண்ணர் - அறிவிலிகள். அமர் - ஒத்த; உவம உருபு.

1044. குறிப்புரை: அருளின் அன்றி - அருள்வழியாக அல்லாமல் பிறவாற்றால். அருளேல் - அருள் வழியாக வருமாயின் துறவிக்குப் புழுவாதலும் நன்றாம், நரகத்து வீழும் இருஞ் சிறையும் நன்றாம்' என்க. "நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறில், இறைவா"1 என மாணிக்க வாசகரும் அருளிச்செய்தார்.


1. திருவாசகம் - திருச்சதகம்.