பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை764

1049.மூவுல கத்தவ ரேத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்(கு)
ஏவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன் மாலயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே.

23


வெட்டினான்' என்பது போலக் கொள்க. கோளரி, இங்கு நரசிங்கம். 'நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் மார்பை நகத்தாற் பிளந்து, அவனது வரத்திற்கு அஞ்சி, அவனது உதிரம் ஒரு துளியும் கீழே விழாதபடி குடித்த திருமால் அந்த உதிர வெறியால் மூவுலகத்தையும் தாக்கியபொழுது தேவர்கள் சிவபெருமானைத் துதித்து முறையிட, அவர் சரபமாய்ச் சென்று நரசிங்கத்தை அழித்தமையால், திருமால் முன் நிலைமையை அடைந்து அருள் உடையரானார் என்பது பண்டை வரலாறு. குழை - குழையை உடையவள். 'குழையை உடையவளை ஒரு பாகத்தில் உடையவனே' என்க. சிம்புள் - சாபம். இதனை, 'எண்காற் பறவை' என்பர். "சிம்புளை விட்டுச் செற்றியனேல்" என்றமையால், சிம்புளைச் சிவபெருமான் தமது உருவினின்றும் தோற்றுவித்து விடுத்தமை பெறப்படும். அரி - திருமால். கதம் - கோபம். மோகம், இங்குத் திகைப்பு. உலந்தது - அழிந்தது. 'அழிந்திருக்கும்' என்பதைத் துணிவு பற்றி, 'அழிந்தது' என்றே கூறினார். 'அழிந்திருக்கும்' என்பதில் 'இருக்கும்' என்பது எதிர்கால முற்றாதலின், அதனொடு முடிந்த 'அழிந்து' என்றும் செய்தென் எச்சம்.

செய்தென் எச்சத்து இறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்1

என்னும் விதியினால் எதிர்காலத்து இறந்த காலமாய்த் தனி இறந்த காலத்தில் அது நிகழாமையைக் குறிக்கும். மூவுலகு - முப்பகுதித்தாய உலகு.

1049. குறிப்புரை: ஏவு தொழில் - அப்பெருமானால் குறிப்பிட்டு ஏவப்பட்ட தொழில். தாவு தொழில்பட்டு - குறித்த இடத்திற்குத் தாவிச் செல்லுகின்ற தொழிலிலே பொருந்தி. சாரதியா - சாரதியாய் இருக்க. 'மால் விடையாய்த் தாவு தொழிற்பட்டு எடுத்தனன். அயன் சாரதியாக, வேதங்கள் இரதத்தொடு பூண்ட மா ஆயின' - என முடிக்க. எடுத்தல் - தாங்குதல்; சுமத்தல் - "சாரதியாக" என்ற அனுவாதத்தானே, 'சாரதி ஆயினான்' என்பது பெறப்பட்டது. மா - குதிரை. இதன்பின் 'ஆயின' என்பது தொகுத்தலாயிற்று. "இரதத்தொடு" என்பதை, 'இரதத்தை' எனத் திரிக்க. அனைவரும் 'தில்லைப் பிரானுக்கு ஏவலாளர்களே' என்றபடி.


1. தொல் - சொல் - வினையியல்