பக்கம் எண் :

77அற்புதத் திருவந்தாதி

139.

ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. 

96

140.

மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ? அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்(டு)
உளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்(கு)
அளைந்தெழுந்த செந்தீ யழல். 

97



அணி, ஆடை, இடம் முதலியன சக்திகள் ஆகின்றன என்பது உணர்க. ‘கங்கையின் வீழ்ச்சியால் உலகம் அழிந் தொழியாதபடி அவளைச் சிவன் தன் தலையில் தாங்கிய தல்லது, காம தகனனாகிய அவனுக்கும் நம்மைப் போலக் காமம் உளதாகக் கருதுதல் மடமையாதலின், நகைச் சுவை தோன்றவே புலவர்கள் அவனை இவ்வாறு கூறித் துதிக் கின்றனர்’ என்பது கருத்து.

139. அ. சொ. பொ.: ‘நாமும் சீர்வல்ல தாயத்தால்’ என மாற்றி முதலிற் கூட்டி, ‘மாயத்தால் மறைத்து வைத்தோம்; இனி#அரன்அவனை ஆர்#காண வல்லார்’ என இயைத்து முடிக்க. அன்பென்னும் போர்வை, உருவகம். “போர்வையது” என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. அன்பினுள் அகப்படுபவனாதல் பற்றி அன்பு அவனை மறைக்கும் போர்வையாக உருவகிக்கப் பட்டது. சீர், ஆகு பெயராய்ப் பாட்டை உணர்த்திற்று. ‘அவனைப் பாட்டால் போற்ற வல்ல தாயத்தால் என்க. தாயம் - செல்வ உரிமை. “நாமும்” என்னும் உம்மை, ‘மற்றைத் தொண்டர்களோடு’ என இறந்தது தழுவி நின்றது. தனி நெஞ்சம் - அன்பு மிக்கமையால் ஒப்பற்ற மனம். மாயம் - என்ற உபாயம். ‘அரனாகிய அவனை’ என்க. ‘அன்பலர் கூடித்தங்கள் அன்பாகிய போர்வையால் மறைத்து வைத்திருத் தலால் அன்பில்லாத பிறர் அவனை எங்ஙனம் காண முடியும்’ என நயம்படக் கூறியவாறு. ‘அன்பில்லாதார் அரனைக் காணுதல் இயலாது’ என்பது கருத்து.

140. அ. சொ. பொ.: ‘நீ நிறைத்திட்டு எரிப்ப, உளைந்து எழுந்து, மூவுலகும் உள்புக்கு, அணைந்து எழுந்த செந்தீ அழலை உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ? அன்றேல், உறைப்போடும் உன் கைக் கொண்டாயோ? (அஃது இன்று உலகை எரிக்கவில்லையோ.) என இயைத்து முடிக்க, ஈற்றில் வருவித்து உரைத்தது இசை யெச்சம். உறைப்போடும் - வலிமையோடும். உம்மை சிறப்பு. உளைந்து - சினந்து ‘மூவுலகினும்’ என்பதில் சாரியை தொக்கது. அணைந்து - விரவி. அழல் - சுவாலை. ‘யாதொரு பொருளும் இறைவனது சங்கற்பத்தைக் கடக்கமாட்டாது’ என்பதாம்.