141. | அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை அழகால் அழல்சிவந்த வாறே? - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு. | | 98 |
142 | செப்பேந் திளமுலையாள் காணவோ ? தீப்படுகாட்(டு) அப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தாய் ஆடும் நடம். | | 99 |
143. | நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல் பொருமேறோ ? ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ(று) உருமேறோ ஒன்றா உரை. | | 100 |
141. அ. சொ. பொ.: அங்கை- அகங்கை. ஆறு - பயன். தீ ஆடுவாய் - தீயின்கண் நின்றுஆடுவாய்; விளி. அகங்கையும், தீயும் அழகால் ஒன்றனைஒன்று விஞ்சுவனவாய் உள்ளன’ எனக் கூறி, அகங்கையின்மிக்க அழகைப் புகழ்ந்தவாறு. இஃது ஏது அணியின்பாற்படும். 142. அ. சொ. பொ.: “தான்அங்காந்து” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. செப்புஏந்து- கிண்ணம்போல நிமிர்ந்த. “கணமவை” என்பதில்அவை, பகுதிப் பொருள் விகுதி. பின் வந்த, “காணவோ”என்பதன்பின், ‘நிகழ்கின்றது’ என்னும் பயனிலைஅவாய் நிலையாக எஞ்சி நின்றது. ‘நடம் நிகழ்கின்றது’ என இயையும். ‘எனக்கு ஒன்றாகச் செப்பு’என்க. ஒன்றாக - திட்டமாக - இனி, “நீ ஆடும்” எனஎழுவாய் வருவிக்க. முடிப்பினும் ஆம். ‘எவர்’ காணுதற்பொருட்டும் நீ ஆடவில்லை; உனது கருணை காரணமாகவே நீஆடுகின்றாய்’ என்பது குறிப்பு. “ஆடும் எனவும், அருங்கூற்றம்உதைத்து வேதம் பாடும் எனவும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நாடும் திறத்தார்க்(கு) அருளல்லது நாட்ட லாமே?1” என அருளிச் செய்தமை காண்க. அங்காத்தல்- வாய் திறத்தல். ஐவாய - ஐந்து வாய்களை உடைய. நாகத்தாய்- பாம்பை அணிந்தவனே. 143. அ. சொ. பொ.: ‘பொன் ஒப்பாய்,நின் ஏறு நடக்கில்’ எனக் கூட்டி உரைக்க. படி - பூமி.நோக்கில் - கண் விழித்துப் பார்த்தால்.
1. திருமுறை - 3.54.6
|