பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை770

1059.புண்ணிய னேயென்று போற்றி செயாது புலன்வழியே
நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல் என்னுள் வந்திட்(டு)
அண்ணிய னே!தில்லை யம்பல வா!வலர் திங்கள் வைத்த
கண்ணிய னே!செய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.

38

1060.கறுத்தகண் டா!அண்ட வாணா! வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யே!தில்லை யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ வருஞ்சொ லரும்பழியே.

39

1061.பழித்தக் கவுமிக ழான்தில்லை யான்;பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி, புலைய னளித்த அவிழ்க்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா(து) அமிர்துசெய் தானென் றியம்புவரே.

40

1062.வரந்தரு மாறிதன் மேலுமுண் டோ!வயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்;புலைப் பொய்ம்மையிலே

1059. குறிப்புரை: புகல் - கதி. அண்ணியன் - இனிப்பவன். கண்ணி - முடியிலணியும் மாலை. அன்றி, 'கண்ணிய மானவன்' என்றலும் ஆம். செய்ய - எல்லாரையும் ஒருபடித்தாக வருத்துகின்ற. காமன் - மன்மதன். வெளுப்ப - சாம்பலாகும்படி. கறுத்தவன் - கோபித்தவன்.

1060. குறிப்புரை: கறுத்த கண்டன் - நீல கண்டன். அண்ட வாணன் - ஆகாயத்தில் இருப்பவன். செறுத்த - அடக்கிய. உறுதுயர் - மிக்க துன்பம். 'அரும்பழி ஆர்க்கு வரும்?' சொல் என்க. ஓகாரம் சிறப்பு. 'உனக்குத்தான் வரும்' என்பது குறிப்பு.

1061. குறிப்புரை: இப்பாட்டில் "அழித்திட்டிறைச்சி புலையன் அளித்த அவிழ்க் குழங்கல்" என இவ்வாறு இருக்க வேண்டிய பாடம் மிகவும் திரிபு பட்டுள்ளது. கண்ணப்ப நாயனாரை "வேட்டுவன்" எனச் சாதிப் பெயராற் கூறியது போலவே, சேந்தனாரையும் 'புலையன்' எனச் சாதிப் பெயராற் கூறினார். சேந்தனார் இட்ட தவிட்டுக் களி திருவமுதாயினமை மேல், "பூந்தண் பொழில்சூழ்" என்னும் பாடலிலும் குறிப்பிடப் பட்டது. அதிபத்தன் - அதிபத்த நாயனார். இவர் வலைஞர். அழித்து - விலங்குகளைக் கொன்று, 'இட்ட' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

1062. குறிப்புரை: புலைப் பொய்மை - கீழான நிலையாப் பொருள்கள். அவை உலகத் துப்புரவுகள். நிரந்தரம் - இடையறாமை.