1070. | விளவைத் தளர்வித்த விண்டுவுந், தாமரை மேலயனும் அளவிற்கு அறியா வகைநின்ற வன்றும் அடுக்கல்பெற்ற தளர்வில் திருநகை யாளும்நின் பாகங்கொல்! தண்புலியூர்க் களவிற் கனிபுரை யுங்கண்ட! வார்சடைக் கங்கையனே. | | 49 |
1071. | கங்கை வலம்,இடம் பூ;வலங் குண்டலம்; தோடிடப்பால்; தங்குங் கரம்வலம் வெம்மழு; வீயிடம்; பாந்தள்வலம் சங்க மிடம்;வலம் தோலிட மாடை; வலம்அக்(கு);இடம் அங்கஞ் சரி;அம் பலவன் வலங்கா ணிடமணங்கே. | | 50 |
கழற்கண்; உருபு மயக்கம். மாறாதல் - ஒடுங்குதல். மீண்டனை - கழலிற் சென்றும் திரும்பினாய். 'என்னை என் செய்திட மீண்டனை' என ஓகாரம் வினாப் பொருட்டு. "சிந்தை" என்பதை முதலிற் கூட்டுக. அதனைப் பின்னும் கூட்டுக. சிந்தை, அண்மை விளி. 1070. குறிப்புரை: ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. களா, "கள" எனச் செய்யுளில் ஈறு குறுகி நின்றது. களா, ஒருவகைச் செடி. 'அதில் உள்ள கனி' என்க. புரையும் - போலும். 'கற்ற வார்சடை' என்பது பாடமன்று. 'வார்சடையிற் கங்கையை உடையவனே' என்க. விளாவைத் தளர்வித்த - (கண்ணனாய் இருந்த நிலைமையில்) விளாங்கனியை (கன்று குணிலா) எறிந்து உதிர்த்த, விண்டு - விட்டுணு; அடுக்கப் பெற்ற - மலையரையன் பெற்ற. தளவின் திருநகையாள் - முல்லையரும்பு போன்ற நகையை உடைய உமாதேவி. 'சடைக் கங்கையனே! நீ மாலும், அயனும் அடி முடிதேட அனற்பிழம்பாய் நின்ற அப்பொழுதும் மலைமகள் உன் இடப்பாகத்தில் இருந்தாளோ' என்க. கொல், ஐயம். 'என்றுமே உமை பாகம் பிரியாய்' எனப்படுகின்ற நீ நெருப்புருவமாய் நின்ற காலத்தில் அவளைப் பிரியாதிருத்தல் எங்ஙனம் கூடிற்று என்றபடி. "எத்திறம் நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்1 என்பது அவள் இயல்பாகலின், நீ நெருப்பாய் நின்றபொழுது, அவள் அதன் சூடாய் இருந்தாள் போலும்" என்பது குறிப்பு. 1071. குறிப்புரை: இப்பாட்டு மாதொரு கூறாம் வடிவத்தை வருணித்தது. 'வலம் கரம் மழுதங்கும்' என இயைக்க. வீ - பூச் செண்டு. பாந்தள் - பாம்பு. சங்கம் - சங்க வளையல். அங்கு, அசை. அக்கு - எலும்பு மாலை. அம்சரி - அழகிய சரிவு. (தொங்கல்) பொன்னரி மாலை முதலியன. காண், அசை. 'வலம் அம்பலவன்; இடம் அணங்கு. (பெண்) இந்நிலைமைக்கு ஏற்ப, தலையில் வலம் கங்கை; இடம் பூ முதலியனவாம்' என்க.
1. சிவஞான சித்தி - சுபக்கம் - சூ.2.75.
|