1074. | வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத்தெண்தோள் மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம் சித்தகக் கோயில் இருத்தும் திறத்(து)ஆ கமியர்க்கல்லால் புத்தகப் பேய்களுக் கெங்கித்த தோ!அரன் பொன்னடியே. | | 53 |
நெறி. அதனை அடுத்துவரும் பாட்டாலும் அறியலாம். "கூடுவது" முதலிய நான்கு தொழிற் பெயர்களும் செவ்வெண், அவற்றது இறுதியில் அவற்றின் தொகை தொகுக்கப்பட்டு நின்றது. 'அவ்வழிக்கண்ணே' - என ஏழாவது விரிக்க. ஒண்சுடர் - ஞானம்; என்றது சிவஞானத்தை. "வீடுவது ஆக" என்பதில் "ஆக" என்றது, 'உண்டாகும்படி' என்றவாறு. வித்தகம் - திறல். திறலால் செய்யப்படும் செயல்களை, 'திறல்' என்றார். 'பிறவாறு செய்யும் செயல்கள் பிறவியை நீக்கமாட்டா' என்பது கருத்து. 1074. குறிப்புரை: வித்தகம், வெண்மதி, கார்நிறக் கண்டம், எண்தோள், கைம்மலைப் போர்வை - இவை அனைத்தும் தில்லை மன்னனாகிய ஒருவனையே சிறப்பித்தன. வித்தகம் - திறல். 'செஞ்சடைக்கண் வெண்மதியை உடைய' என்க. கார் - மேகம்; கருமையுமாம். கை மலை - யானை. இஃது ஆகு பெயராய், அதன் தோலைக் குறித்தது. சித்தம் - மனம். 'சித்த' என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது. 'சித்தமாகிய அகக் கோயில்' என்க. 'கோயிலின்கண்' என ஏழாவது விரிக்க. ஆகமியர் - சிவாகம நெறியில் நிற்பவர்கள். "காருறு கண்ணியர்" என்றாற் போல்வனவற்றில் ஒருமையுணர்த்தும் இகர விகுதி சாரியையாய்விட 'அர்' என்னும் பன்மை விகுதிபுணர்ந்து பன்மையை உணர்த்தும். இவ்வாறு வருதல் அஃறிணைப் பெயர்கள் இன்மையாலும், இன்னோரன்னவை உயர்வு பற்றி வந்த பன்மைப் பெயராகாது. பொருட்பன்மை பற்றிய பெயர்களே ஆதலாலும் இவை தனி மொழிகளில் ஒட்டுப் பெயர் ஆக்கத்தில் உள்ள சில வேறுபாடுகளேயாம். ஆசிரியர் தொல்காப்பியனார் தனிமொழியாக்கத்தைக் கூற முற்படாமை யின இன்னோரன்னவற்றை அவர் விரித்திலர், "புத்தகப் பேய்கள்" - சுவடிகளைக் காத்தல் மாத்திரத்தையே உடையவர்கள். புத்தகமே சாலத் தொகுத்தும் பொருளறியார் உய்த்தக மெல்லாம் நிரப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே; பொருள்தெரிந்து தேற்றும் புலவரும் வேறு1
1. வெண்பா - 318.
|