1080. | சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும், செழுஞ்சடைமேல் விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும், வெங்கதப் பாந்தளும்,தீத் தரித்திட்ட வங்கையும், சங்கச் சுருளுமென் நெஞ்சினுள்ளே தெரிந்திட்ட வா!தில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே. | | 59 |
1081. | நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செயும்? காமனன்று கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன்; விற்கொடும்பூண் விடுஞ்சினத் தானவர் வெந்திலர்; வெய்தென வெங்கதத்தை ஒடுங்கிய காலனந் நாள்நின் றுதையுணா விட்டனனே. | | 60 |
எள்ளி நகையாடுதல். 'அருள்வழியால் வந்த சொற் பிரபந்தத்திற்கு அஃது இன்றி, மலவழியால் வரும் சொற்பிரபந்தங்கள் ஒவ்வா' என்பது கருத்து. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் சிவபிரான் மீது பாடப்பட்ட வேறு சில கோவைகளும் இருந்தமை அறியப்படும். 1080. குறிப்புரை: "தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடன்" என்பதை முதலிற் கொள்க. சிரித்திட்ட - ஒளிவீசுகின்ற. பவளம் - பவளத்தின் நிறம்; ஆகுபெயர். திரள் - திரள் போலும் திருவுருவம். கதம் - கோபம். சங்கச் சுருள் காதில் உள்ளது. தெரித்திட்டவா - தோற்றுவித்தவாறு; 'வியப்பினது' எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. நடன் - நடனத்தைச் செய்பவன். 1081. குறிப்புரை: இப்பாட்டு நிந்தாத்துதி. அஃதாவது, பழித்ததுபோலப் புகழ் புலப்படுத்தியது. மிக்க சினத்தோடு தீ எழப் பார்த்த அவன்முன் மன்மதன் குளிர்ந்து எழுந்தான். திரிபுரத்தை எரித்தபொழுது அதில் இருந்த அசுரர்கள் எரிந் தொழியவில்லை. (முன்போலவே இருந்தார்கள்). அவனால் உதைக்கப்பட்ட பின்பும் யமன் முன்போல இருந்து கொண்டுதான் இருக்கின்றான் என்றால் தில்லையம்பலத்தில் நடனம் புரியும் பெருமான் கோபித்தால், அக்கோபம் யாரை, என்ன செய்யும்? (இரதிதேவி தன் வேண்டுகோளுக்கு இரங்கிச் சிவபெருமான் முன்பு எரிந்துபோன மன்மதனை எழுப்பித் தந்து, அவளுக்கு மட்டும் முன்போலத் தோன்றியிருக்கும்படி செய்தார். திரிபுரத்தை எரித்தபொழுது புத்தன் போதனையால் மயங்கிப் பத்தியை விட்டுவிடாமல் முன்போலவே இருந்த ஒரு மூவர் அசுரரை எரியாது பிழைத்திருக்கச் செய்தார். யமனை உதைத்த பின்பு எழுப்பி 'எம் அடியவர்பாற் செல்லாதே' என்று அறிவுரை கூறி விடுத்தார். இவைகளையெல்லாம் குறிப்பிடாமல் பொதுவாக நகைச்சுவை தோன்றக் கூறினார். 'தீமைக்குத் தீமையைத் தருதல் மட்டுமன்றி, நன்மைக்கு நன்மையும் தருபவன் சிவன்' என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
|