பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை782

1084.கழலும் பசுபாசர் ஆம்இமை யோர்தங் கழல்பணிந்திட்(டு)
அழலு மிருக்குந் தருக்குடை யோர்,இடப் பால்வலப்பால்
தழலும், தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்
சுழலு மொருகா லிருகால் வரவல்ல தோன்றல்களே.

63

1085.தோன்றலை, வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்வரி யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்றலை யான்பா லதுகலந் தாலன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே

64


வரகுணர் இருவருள் ஒருவனே இப் பாட்டில் குறிக்கப்பட்ட வரகுணன்' எனச் சிலர் கூறுதல் ஏற்புடையதாய் இல்லை. எனவே, இவ்வரகுணன் தமிழ் நாட்டில் கல்வெட்டுக்கள் தோன்றுதற்கு முன்னே வாழ்ந்த வரகுணனாவன்.

பொடி - திருநீறு. ஏர்தரு - அழகைத் தருகின்ற. பூசல் - போர்; போர்க்களம். "அடிக்கு" என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரிக்க. கடி, வடி - கூர்மை. கோயிற் கருவி - அரண்மனையில் உள்ள படைக்கலங்கள். 'அவை யில்லாமல்' என்றது. 'அவைகளை எடாமலே' என்றபடி. அமையும் - ஏற்கும். 'முடியின் கண்' என ஏழாவது விரிக்க.

1084. குறிப்புரை: "இடப்பால் வலப்பால்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. 'இடப்பால் தழலும், வலப்பால் தமருகமும்' என நிரல் நிறையாக இயைக்க. சுழல் வரல் - சுற்றி வருதல், "சுழலும்" என்னும் உம்மை 'வீழ்ந்து பறிந்து' என இறந்தது தழுவிற்று. தோன்றல்கள் - பெருமையுடையவர்கள். கழலும் பசு பாசம் - பசுக்களைக் கட்டியுள்ள பாசம் கழலுபவர். ஆம் இமையோர் - மக்களின் மேலானவராகிய தேவர்கள். தம் கழல் - தமது (சுற்றி வந்தவர்களது) பாதங்கள். அழல் - அன்பினால் கண்ணீர் வார நிற்றல். "அழல்" என்னும் தொழிற்பெயர் 'அழ' என்னும் செயலென் எச்சப் பொருட்டாய் நின்றது. உம்மை சிறப்பு. தருக்கு - பெருமிதம். 'தில்லை யம்பலத்தை வணங்கினோர், தம்மைத் தேவர் வணங்க இருப்பார்கள்' என்பதாம்.

1085. குறிப்புரை: தோன்றல் - பெருமையுடையவன். துள்ளிய - அகங்கரித்த. தோன்றல், தாங்கி, சார்வரியோன், சீரன், நாதன் - இவை ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள். தேன்தலை - தேனின்கண். ஆண்பால் - பசுவின்பால். சீர் - தன்மை. வான் - வானுலகத்திற்கு, தலை நாதன் - மேலான தலைவன். "காண்பது" என்பதற்கு, 'இடைவிடாது காண்பது' என உரைக்க.