1086. | மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ! வடவனத்து மின்றங் கிடைக்(கு)உந்தி நாடக மாடக்கொல்! வெண்தரங்கம் துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக் கன்றங் கடைசடை மேலடை யாவிட்ட கைதவமே. | | 65 |
1087. | தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்னடி யெற்குதவும் சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச்செய்ய அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த பவனைப் பணியுமின்; நும்பண்டை வல்வினை பற்றறவே. | | 66 |
1086. குறிப்புரை: 'மன்று அங்கு, கன்று அங்கு' என்ப வற்றில் வந்த 'அங்கு' என்பன அசைகள். வட வனம் - திருவாலங்காடு. 'மின் தங்கு இடை' என்றது காளியை. 'இடைக்கு எதிராக' என ஒரு சொல் வருவிக்க. உந்தி - எழும்பி. கொல், ஐயம். தரங்கம் - அலை. அம் - அழகு கங்கையாளை வெளியில் இருக்க விடாமல் சடைக்குள் மறைத்து வைத்த கைதவம் (கரவு) காளி எதிரில் நடனம் ஆடுதற் பொருட்டோ' என்றபடி. 'தனித்து நின்று ஆடாது, ஒரு பெண்ணுடன் சேர்ந்து நின்று ஆடினால் காளி நடனப் போர் செய்ய உடன்பட மாட்டாளன்றோ' என்றபடி. இளம் பாம்புகளை, "கன்று" என்றது மரபு வழுவமைதி. "இளநாகமொடு என முளைக்கொம் பவை பூண்டு"1 எனத் திருஞானசம்பந்தரும் அருளிச் செய்தார். அடைத்தல் - மறைத்தல். அடையா இட்ட - அடைத்து வைத்த. கைதவம் - வஞ்சனை. சிவபெருமான் திருவாலங்காட்டில் நடனப் போர் செய்தமை மேல்" அணங்காடகக் குன்ற மாது2 என்னும் பாட்டிலும் கூறப் பட்டது. 1087. குறிப்புரை: 'உலகீர்' - என்னும் முன்னிலை வருவித்து, "நும் வினை பற்றற என எடுத்துக்கொண்டு உரைக்க. தவன் - தவக் கோலம் உடையன். "சிவக்க" என்றது, 'தீயால் சிவந்து தோன்ற' என்றபடி. சிவந்தான் - கோபித்தான். "பெறலின், இழவின், காதலின், வெகுளியின்"3 என்றதனால், வெகுளுதல் இரண்டாம் வேற்றுமை பெறுதலை உணர்க. 'திரிபுரத்தை அவை சிவக்கச் சிவந்தான்' என மாற்றிக் கொள்க. செய்ய - சிவந்த நிறத்தையுடைய. பவன் - கருதுவார் கருதும் இடத்தில் தோன்றுபவன். "கடி சொல் இல்லைக் காலத்துப் படினே"4 என்பதனால் முன்னிலைக்கண் வந்த உம்'
1. திருமுறை - 1.1.2. 2. பாட்டு - 51. 3. தொல் - சொல் - வேற்றுமையியல். 4. தொல் - சொல் - எச்சவியல்
|