பக்கம் எண் :

791திருத்தொண்டர் திருவந்தாதி

ஏனாதிநாத நாயனார்

1102.பத்தனை யேனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்
நித்தனை யீழக் குலதீப னென்பரிந் நீள்நிலத்தே.

10

கண்ணப்ப நாயனார்

1103.நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணில் குருதிகண் டுள்நடுங்கி
வலத்திற் கடுங்கணை யால்தன் மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.

11

குங்குலியக்கலய நாயனார்

1104.ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரிற் கலயனையே.

12

மானக்கஞ்சாற நாயனார்

1105.கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்
அலசு மெனக்கரு தாதவள் கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாற னெனும்வள்ளலே.

13


1102. குறிப்புரை: எயினை - எயினனூர். 'ஒழிந்து, அவன் கண்டிப்ப நின்றருளும் நித்தன்' என்க. ஈழக் குலம் - ஈழச் சான்றார் குலம்.

1103. குறிப்புரை: இந்நாயனார் வரலாறு மேற்போந்த இரு திருக்கண்ணப்ப தேவர் திருமறங்களிலும் சொல்லப்பட்டது.

1104. குறிப்புரை: கண்டம் - கழுத்து. 'சிவனை நிலைப்பித்தான்' என்பதில் இரண்டன் உருபும், பிறவினை விகுதியும் தொகுக்கப்பட்டன. 'கொடுத்துக்கொண்டு' என இயையும். காலனைக் காய்ந்த அரன், திருக்கடவூர்ப் பெருமான்.

1105. குறிப்புரை: 'கன்னியாகிய புதல்வி' என்க. 'நல்ல' என்பது இடைக்குறைந்து நின்றது. பஞ்சவடி, மாவிரத மதத்தினர் மார்பில் அணியும் மயிர்க்கயிறு. அலசும் - (மகள்) வருந்துவாள். கஞ்சை - கஞ்சாறூர்.