அரிவாட்டாய நாயனார் 1106. | வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோ னுகலுமிங்கே வெள்ளச் சடையா யமுதுசெய் யாவிடி லென்தலையைத் தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன்காண் அள்ளற் பழனக் கணமங் கலத்தரி வாட்டாயனே. | | 14 |
ஆனாய நாயனார் 1107. | தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்த்துளை யாற்பரவும் வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன் ஆயவன் ஆனாய னென்னை யுவந்தாண் டருளினனே. | | 15 |
சுந்தரமூர்த்தி நாயனார் 1108. | அருட்டுறை யத்தற் கடிமைப்பட் டேனினி யல்லனென்னும் பொருட்டுறை யாவதென் னேயென்ன வல்லவன் பூங்குவளை இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரானடைந்தோர் மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே. | | 16 |
மூர்த்தி நாயனார் 1109. | அவந்திரி குண்டம ணாவதின் மாள்வனென் றன்றாலவாய்ச் சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டவொண் மூர்த்திதன்னூர் நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே. | | 17 |
1106. குறிப்புரை: வள்ளற் பிரான் - சிவபெருமான். அமுது - நிவேதன அமுது. உகலும் - தவறிக் கீழ் கொட்டிப்போன பொழுது. கணமங்கலம், ஊர். 1107. குறிப்புரை: தாயவன் - தாய்போன்றவன். துளை - துளைக் கருவி. வேய் - மூங்கில். 'துளையால் தொடர்ந்து பரவும் வேயவன்' என்க. பரவுதல் - துதித்தல். மங்கலம், ஊர். 'ஆன் ஆயன் - பசுக்களை மேய்க்கும் இடையன். 1108. குறிப்புரை: இதன் முதல் இரண்டடிகள் "பித்தா பிறை சூடி" எனத் தொடங்கும் திருப்பதிகத்தின் பொருளை உணர்த்தி நின்றன. குவளை மலர்கள் கருநிறத்தன ஆகலின் அவற்றை இருட்டாக உருவகம் செய்தார். நாவல், திருநாவலூர். 1109. குறிப்புரை: குண்டு அமண் ஆவதில் மாள்வன் - கீழான சமண் சமயத்து அரசன் வழிப்பட்டு எனது பணியை ஒழிப்பதைவிட இறந்துபடுவேன். நிவந்த - ஓங்கிய.
|