பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை80

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
அருளிச் செய்த

5. சேத்திரத் திருவெண்பா

திருச்சிற்றம்பலம்

145.

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்
கோடுகின்றார்; மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

1


145. இவற்றின் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க.1 சேத்திரம் - சிவத்தலம்.

அ. சொ. பொ.: (இவ் வெண்பாக்கள் யாவும், ‘யாக்கை யின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழி பட்டு உய்தல் வேண்டும்’ என்பதையே அறிவுறுத்துகின்றன.) இவ்வெண்பா, ‘தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குக’ எனக் கூறுகின்றது.

நீர்மை - தன்மை; ‘நடத்தலேயன்றி ஓடவும் இருந்த வலிமை நீங்க, மூப்பு வந்தவுடன்’ என்றபடி. உற்றார் - பிறவியிலே அன்புடையவராய்ப் பொருந்தினவர்; சுற்றத்தார்; மனைவி, மக்கள் முதலாயினார். “உற்றாரும்” என்னும் உம்மை உயர்வு சிறப்பு. கோடுகின்றார்- மனம் மாறிவிடுவர்; தெளி வினால் எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது. “மூப்பும்” என்னும் உம்மை இளமையாகிய இறந்ததனைத் தழுவிற்று. ‘வரும்’ என்று அஞ்சப்பட்ட அதுவும் வந்துவிட்டது - என்றபடி. நாடுகின்ற - மிகவும் விரும்பப்படுகின்ற. நல் அச்சு - வண்டியில் பளுவைத் தாங்குகின்ற நல்ல அச்சுப் போல்வ தாகிய உடம்பு. அஃது இறுதலாவது, செயலற்று வீழ்தல். அம்பலம், யாவருக்கும் உரிய பொது இடம். அஃது மயானத்தைக் குறித்தது. “அம்பலமே” என்னும் பிரிநிலை ஏகாரம் செயலற்று வீழ்ந்த உடலுக்கு அது தவிர இடம் இன்மையைக் குறித்தது. “சிற்றம்பலமே” என்னும் பிரிநிலை ஏகாரம், ‘சேரத் தக்க இடம் பிறிதன்று என்பதை உணர்த்திற்று. “நல்நெஞ்சே” என்பதை முதலிற்கொள்க. ‘நல்வழியைப் பற்றுதற்கு உரியை’ என்பது தோன்ற, “நல் நெஞ்சே” - என்றார். பின்னிரண்டடிகள் ‘திரிபு’ என்னும் சொல்லணி பெற்றன. மேலும் இவ்வாறு வருவன காண்க.


1. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.