1137. | சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவனளித்த வீரக் கடகரி முன்புதன் பந்தி யிவுளிவைத்த வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாயின்று தொண்டுபட்டே. | | 45 |
கணநாத நாயனார் 1138. | தொண்டரை யாக்கி யவரவர்க் கேற்ற தொழில்கள்செய்வித் தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண் கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள்தொறும் கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே. | | 45 |
மக்கட்குத் தலைவரே; அண்மை விளி. "அடி வண்ணான், அடிச்சேரன்" என்னும் பயனிலைகட்கு 'யான்' என்னும் எழுவாய் தனித்தனி வருவிக்க. "தென்னர்" என்பது 'தமிழர்' எனப் பொதுப் பொருள் தந்தது. சொல்வாரது குறிப்பினால் சேரநாட்டுத் தமிழரைக் குறித்தது. கழறிற்று அறிவான், எந்த உயிரும் தன்தன் மொழியில் கூறுவதை அறிய வல்லவன். 1137. குறிப்புரை: "எனது உள்ளம்" என்பது விளி; அதனை முதற்கண் வைத்து உரைக்க. "சேரற்கு, வீரற்கு, சூரற்கு" என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள். தென்னாவலர் பெருமான், தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவர்; சுந்தர மூர்த்தி நாயனார். கட கரி - மத யானை; இது வெள்ளை யானை. பந்தி, குதிரைப் பந்தி. இவுளி - குதிரை. "வைத்த" என்றது, 'ஒட்டிய' என்றபடி. கருப்பு வில் வீரன், மன்மதன். அவனை வெற்றி கொண்டமையாவது, தமக்கு உரிமைத் தேவியரான பலருள் ஒருவரையும் நினையாது ஒரு கணத்திலே துறந்து கயிலை சென்றமை. சூரன் - ஆண்மையுடையவன். 'ஏனையோரை வெல்லும் ஆண்மைகள் எல்லாவற்றினும் மேலான ஆண்மை மன்மதனை வெல்லும் ஆண்மையே' என்பதாம். 'சூரற்கு இன்று தொண்டுபட்டு நன்று செய்தாய்' என்க. 1138. குறிப்புரை: தொண்டரை ஆக்குதலாவது, பிற வழிகளில் முயல்பவர்களை சிவனது தொண்டு முயற்சியில் திருப்பிவிடுதல். 'அம் முயற்சிகளுள் அவரவருக்கு ஏற்புடைய பணி இது இது' எனத் தெரிந்து அப்பணியில் அவர்களை ஈடுபடுத்தியவர் இந்நாயனார் என்க. அப்பணிகளுள், திருமுறைகளை ஏட்டில் எழுதுதல் ஒரு சிறந்த திருப்பணி யாகும். 'திருமுறை' என்பது பழங்காலத்தில் இறை வணக்கப் பாடல்கள் வரையப்பட்ட ஏடுகளுக்கு வழங்கிய பெயர்.
|