பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை818

முப்போதுந் திருமேனி தீண்டுவார்

1166.நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியற் சிப்பவர் நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை வாய வுலகினிலே.

74


வட்டம் - முதற் காலத்திலே 'திருவாரூர்' என வரையறுக்கப்பட்ட எல்லை வட்டம். செல்வன் - சிவன்.

1166. குறிப்புரை: 'நெறிசடை, வார்சடை' - எனத் தனித் தனி இயைக்க. நெறி - நெறித்த; நெறிப்பில்லாத - தலைமயிர் 'கோரை மயிர்' என இகழப்பட்டும் வார் - நீண்ட "சடையர்" என்றது, திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவரையே என உணர்க. முப்போது - மூன்று காலம்; காலை, பகல், இரவு என்பன. காலைக்குமுன் வைகறையும், பிற்பகலாகிய அந்தியும், இரவுக்குமுன் மாலையும் வேறுபடுத்துக்கூறி, 'காலம் ஆறு' எனப்படும். "தீண்டி" என விதந்து ஓதினமையால் தீண்டும் உரிமை சிலர்க்கே உரித்தாதல் பெறப்பட்டு இவ்வுரிமை யுடையாரைச் சேக்கிழார் "முதற் சைவர்" எனவும், "சிவ வேதியர்" என்றும் குறித்தருளினார்.1 இவர்களை யுள்ளிட்ட திருத்தொண்டர்களைத் தொகுத்தோதியருளிய சுந்தர மூர்த்தி நாயனாரும் இவ்வாசிரியரும் அம்மரபினரேயாவர். ஆகமம், சைவாகமம். அர்ச்சிப்பவர் - வழிபடுபவர். 'முப்போதும் சடையாரைத் தீண்டி அற்சிப்பவர்' என்க. "நம்மையும் ஆண்டு" என்றதனால், அவரது ஆசிரியத் தன்மை குறிக்கப்பட்டது. முதற் சைவர்கள், தந்தை, மகன், பெயரன் என இவ்வாறு குடி வழியானே ஆசிரியராய் இருத்தலால் அவரவரும் தம் தம் மக்கட்குத் தாமே ஆசிரியராயும் விளங்குவர். ஏனையோர்க்கு அவர் ஆசிரியராதல் சொல்ல வேண்டா. இங்கு "அமரர்" என்றது இந்திரன், அயன், மால் உலகத்து உள்ளாரையும், வித்தியேசுர, மகேசுர உலகத்து உள்ளாரையும், மால் உலகத்தவர் ஈறாயினார்க்கு இறைவராதல் உருத்திர புவனங்களில் இருந்தும், ஏனையிருவர்க்கும் இறைவராதல் சுத்த வித்தியா தத்துவ ஈசுர தத்துவ புவனங்களில் இருந்துமாகும். ஈசுர தத்துவ புவனத்தில் தலைவராயினார் 'மந்திர மகேசுரர்' எனப்படுவர். எனவே, உருத்திர புவனங் களையும் இங்கு, "சிவபெருமாற்கு உறைவாய உலகம்" என்றல் உபசாரமாம். இங்ஙனம் வேறுபட்ட உலகத்திற் சென்று இறைவராதல் அவரவர் பத்தி நிலை வேறுபாட்டினாலாம். "இறை" என்றது பன்மையொருமை மயக்கம்.


1. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்