பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை820

சுந்தரமூர்த்தி நாயனார்

1169.செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன் னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர னென்றுநாம் கேட்பதுவே.

77


"அப்பால்" என்பதை அதன்பின்னர்க் கூட்டுக. அடைத்தல் - நிரப்புதல். அப்பால் - இடத்திற்கு அப்பாலும், காலத்திற்கு அப்பாலும். இவற்றுள் காலத்திற்கு அப்பாலாவன முன்னும், பின்னும். திருத்தொண்டத் தொகையில் சொல்லப் பட்ட அடியார்கள் வாழ்ந்த இடம் தமிழ் நாடே. காலங்கள் பலவாயினும் அவைகளை ஒருங்குஇணைத்து நோக்கினால் அவை ஒரு கட்டமாய் அமையும். 'இவ்வாறு உள்ள இடம், காலங்களில்' வாழ்ந்த, வாழும் அடியார்களை யான் அறியேனாயினும் அவர்கட்கும், அவர்தம் அடியார்க்கும் யான் அடியேன்' என நாவலூர் நம்பிகள் அருளிச் செய்தார். எனவே அவ்விடம், காலங்களில் முன்பு வாழ்ந்தவர்களுள்ளும், இனி வந்து வாழ்பவர்களுள்ளும் வேத சிவாகமங்களை உணர்ந்தும், உணர்ந்து ஒழுகுவோரைப் பின்பற்றியும் பிறை சூடிதன் பெய் கழற்கே ஒருக்கு மனத்தொடு அவ்வடிக்கே சார்ந்தாரும் திருத் தொண்டராதல் பெறப்பட்டது. எனவே, "அப்பாலும் அடிச் சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" என நம்பியாரூரர் அருளிச் செய்தது திருத்தொண்டத் தொகைக்குப் புறனடை யாயிற்று. பலவகைப் புறனடைகளில் இஃது ஒழிபாய புறனடையாம். இவ்வாறு கூறுதல் "அறியாது உடம்படல்"1 என்னும் உத்திவகை. அஃதாவது ஒருபொருளைத் தான் சிறப்பு வகையால் அறியாவிடினும் பொதுவகையால் அறிந்த மாத்திரத்தானே அதனை உடம்பட்டுக் கொள்ளுதல் தெரிக்கும் - தெரிக்கப்படும். கணம் - குழாம். பல்கணம், இனத்தாலும் வாழ்க்கை நெறியாலும் வேறுபட்ட பல குழாத்தினர் எனினும் சிவனுக்குத் தொண்டுபட்ட வகையில் ஓர் இனத்தவராயினோர். 'பல்கணத்தவராகிய செழுந்தவர்' என்க.

1169. குறிப்புரை: இப்பாட்டின் பொருளைப் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமர் புராணத்துட் போந்த சுந்தரர் வரலாற்றால் அறிக. இதனுள், "என்று" என்னும் இடைச் சொல், 'என்பது' எனப் பெயர்ப்பொருள் தந்தது. அன்றி, 'நாம் கேட்பது ஒன்று' என ஒரு சொல்வருவித்து முடித்தலும் ஆம்.


1. தொல் - பொருள் - மரபியல்.