திருத்தொண்டத்தொகைப் பாடல் முதற்குறிப்பு 1180. | பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை யிலைமலிந்த அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர் இணைத்தநல் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின் மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே. | | |
திருப்பதிகப் பொருட் சிறப்பு 1181. | ஓடிடும் பஞ்சேந் திரிய மொடுக்கியென் னூழ்வினைகள் வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர் சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையினுள்ள சேடர்தஞ் செல்வப் பெரும்புக ழந்தாதி செப்பிடவே. | | 89 |
திருச்சிற்றம்பலம்
1180.குறிப்புரை: "அணித்திகழ், சீர் இணைத்தல், பின் மணித் திகழ்சொல் - இவை செய்யுள் நோக்கி அடைமொழிகளாய் வந்தன. இதனுள் பதினொரு முதல் நினைப்புக்கள் கூறப்பட்டமை காண்க. இப்பாட்டுத் திருத்தொண்டத் தொகையை மனப்பாடம் செய்து சொல்லார்க்குப் பயன் தரும். "அணித்திகழ்" என்பதில் தகர ஒற்று விரித்தல் மணித்திகழ் - மணிபோலத் திகழ்கின்ற. 1181.குறிப்புரை: "எத்தவம் செய்தனன்" என்பதற்கு, 'யான்' என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. சேடர் - பெருமை யுடையவர். இப்பாட்டே இவ்வந்தாதியின் முதற் செய்யுள் முதற் சொல்லால் முடிந்தமையின், ஈற்று மூன்று பாடல்களுங்கூட ஆசிரியர் அருளிச் செய்தனவே என்க. திருத்தொண்டர் திருவந்தாதி முற்றிற்று
|