பக்கம் எண் :

827ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

34. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

திருச்சிற்றம்பலம்

கட்டளைக் கலித்துறை

1182.பார்மண் டலத்தினிற் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே.

1

1183.பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர் மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம ராவதி காவலரே.

2


1182. குறிப்புரை: ஆளுடைய பிள்ளையார், திருஞான சம்பந்தர்.

பார் மண்டலம் - நில வட்டம். சீகாழியின் பன்னிரு பெயர்களாவன, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை, கழுமலம்' - என்பன. இவைகளைத் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களால் அறிக. படப்பை - தோட்டம். கார் மண்டலக் கண்டம் - கறுத்த வட்டத்தையுடைய கழுத்து. தார் மண்டலம் - மார்பிலணியும் மாலை வட்டம். மேவிய - அவதரித்த. பதி - நகரம் எண்தோளன் கருணை பெற்ற சம்பந்தன் மேவிய தண்பதி பிரமபுரம்' என முடிக்க. எண்தோளன் - சிவபெருமான்.

1183. குறிப்புரை: பெருவழி, பல சிறுவழிகள் வந்து (குறுகிய தூர வழிகள்) வந்து சேரும் நெடுந்தூர வழி சமயத் துறையில் பெருவழி, சைவம் பிற சமயங்கள் யாவும் அதனுள் அடங்கும்.

ஓதுசமயங்கள், பொருள் உணரும் நூல்கள்

ஒன்றோ டொன்று ஒவ்வாமல் உளபலவும்;

யாது சமயம்? பொருள்நூல் யாது இங்கு? என்னில், இவற்றுள்

இது ஆகும்; இது அல்லது; எனும் பிணக்கது இன்றி,

நீதியினால், இவையாவும் ஓரிடத்தே காண

நின்றது யாது, அதுசமயம், பொருள் நூல்;