பக்கம் எண் :

845ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1216.இடையு மெழுதா தொழியலும் ஆம்;இன வண்டுகளின்
புடையு மெழுதினும் பூங்குழ லொக்குமப் பொன்னனையாள்
நடையும் நகையுந் தமிழா கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியு மெழுதிடின், சால அதிசயமே.

35

1217.மேனாட் டமரர் தொழவிருப் பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர் வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல் லாத புலையருமே.

36

 

முன்னைச் செறிவு செறிவாகா தொழிகின்றது"1 என்பதை உணர்த்தினான். நுதல், இங்கே புருவம். முண்டம் - நெற்றி. 'தெறுகின்றவாறாய் அமைந்தமை அவள் முன்பு செய்த எந்தத் தவத்தின் பயனோ' என்க. தவம், கருவியாகு பெயர். "கண்டவரைத் தெறுகின்றவாறு" என்றதனால், 'நீயும் கண்டனை யாலின் இவ்வாறு கழலுகிறாய்' - என்றான். துறுகின்ற - முழுமையாகச் செறிந்து நிற்கின்ற.

1216. குறிப்புரை: இப்பாட்டு "மடல் என, மடல்மா கூறிய தலைவற்கு, "அதற்கு அவள் வடிவை ஓவியமாக எழுதிக் கொணரல் வேண்டும்; அது நும்மால் இயலாது' எனத் தோழி கூறி நகையாடியது.

'வண்டுகள் மெய்க்கும் சூழலை நீர் எழுதிவிட்டாலும் அப்பொன்னனையாளது பூங்குழலை ஒருவாறு எழுதியது போல் ஆய்விடும். இனி இடையையும் எழுதாது ஒழிந்தால் அதனையாரும் குறையாக நினைக்க மாட்டார்கள். (ஏனெனில் காண்டற்கு அரிது) ஆயினும் அவளது நடையையும், நகைப்பையும், தேன்போலும் மொழியையும் நீர் எழுதிக் கொணர்ந்தால் அது பெரிய அதிசயமாகும்' என உரைக்க.

சிந்தா மணியும், திருக்கோ வையும்எழு திக்கொளினும்
நந்தா உரையை எழுதல் எவ் வாறு நவின்றருளே2

எனப் பிற்கால ஆசிரியரும் கூறினார். தமிழாகரன் - ஞான சம்பந்தர். "தேன் அடையும்" என்பதில் "அடையும்" என்பது 'சிவணும்' என்பது போல உவம உருபு.

1217. குறிப்புரை: மேல் நாடு - விண்ணுலகம். "வினைப் பயன்கள் தாம்" என்பதில் தாம், அசை. தமிழர் தங்கள் கோன், பாண்டியன். பூ நாட்டு அடி - பூவின் தன்மை பொருந்திய பாதம்.


1. திருக்குறள் - 1110.
2. திருவெங்கைக் கோவை.