பக்கம் எண் :

847ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

தழலியல் வெம்மை தணித்தருள் நீ;தணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற வாரணங்கே.

38

1220.அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ் செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே.

39

1221.இருந்தண் புகலி,கோ லக்கா, வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம், தாளம்,நன் பொன்,சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர மோ!நின்று பேசுவதே.

40


'கதிரவனே! வினையேன் பெற்ற ஆரணங்கு, தணியாத வெம்மையால் அழல் இயல்பினையுடைய தான் நடந்தாள்; ஞானசம்பந்த கழலைப் பணிதல்போல உன்னையும் நான் கழலணிந்த பாதத்தைப் பணிந்தேன்; நீ அந்தத் தழல் இயல் வெம்மை தணித்தருள்' என இயைத்து முடிக்க. குழல் இயல் இன்கவிகுழல் இசையின் இயல்பினை உடைய இனிய பாடல்கள். "பாதம் பணிந்தேன்" என்பது 'வணங்கினேன்' என ஒருசொல் நீர்மைப் பட்டு, "உனை" என்றும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

1220. குறிப்புரை: இப்பாட்டில் ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் பல எடுத்துக் கூறப்பட்டன. அவைகளைப் பெரிய புராணத்தால் அறிக.

அணங்கு - தெய்வத் தன்மை. 'இசைத் தெய்வம்' என்னுமாம். கணம் - கூட்டம். பிணங்கு அலை நீர் - எதிராக வீசிவரும் அலைகளையுடைய நீர்.

1221. குறிப்புரை: "புகலியில் அருந்தப் போனகம், கோலக் காவில் ஒற்றத் தாளம், ஆவடு துறையில் முத்தீச் செயப் பொன், அரத்துறையில் ஏறச் சிவிகை அரன் அளித்த சீரினை நின்று பேசுவது எம் பரமோ" என இயைத்துக் கொள்க. பெருந்தகை, ஞானசம்பந்தர். "அளித்த பெருந்தகை" என்பதில், 'அரசன் ஆ கொடுத்த பார்ப்பான்' என்பது போலப் பெயரெச்சம் கோடற் பொருட் பெயர் கொண்டது.