1222. | பேசுந் தகையதன் றேயின்று மன்றும் தமிழ்விரகன் தேசம் முழுதும் மழைமறந்(து) ஊண்கெடச் செந்தழற்கை ஈசன் திருவரு ளாலெழில் வீழி மிழலையின்வாய்க் காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே. | | 41 | 1223. | பெறுவது நிச்சயம் அஞ்சல்;நெஞ் சேபிர மாபுரத்து மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால், வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த பொறியுறு பொற்கொடி யெம்பெரு மானமர் பொன்னுலகே. | | 42 | 1224. | பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை, யருகர்தங்கள் தென்னாட் டரணட்ட சிங்கத் தினை,யெஞ் சிவனிவனென்(று) அந்நாள் குதலைத் திருவாய் மொழிக ளருளிச்செய்த என்னானை யைப்பணி வார்க்கில்லை, காண்க யமாலயமே. | | 43 |
1222. குறிப்புரை: '-தமிழ் விரகன், மழை மறந்து ஊண் கெட, வீழி மிழலையின் வாய்க்காசின் மழைபொழிந்தான் - என்று இஞ்ஞாலம் இன்றும், அன்றும் பேசும் தகையது அன்று' என இயைத்துக் கொள்க. "பேசும்" என்றது 'பேசி முற்ற முடிக்கும்' என்றபடி. கண்கூடாக விரைவிற் காண்பது. இன்றைய நிலையாகலின் அதனை முன்னர்க் கூறினார். 'உலகத்தாரால் முற்ற முடியக் கூறல் இயலாது' என்பதாம். காசின் மழை - காசினால் உண்டான மழை. அஃது உண்டி மழை. "மழை மறந்து" என்றதற்கு ஏற்ப உண்டியையும் மழையாக உருவகித்தார். "மறந்து" என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருட்டாய் நின்றது. 1223. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை. வெறி - நறுமணம். மறி - மான் கன்று. 'விடை எடுத்த கொடி' - என்க. பொறி - பொறித்தல்; எழுதுதல். பொன் - அழகு. 'ஞானசம்பந்தரை வாழ்த்தினாலே சிவலோகத்தை அடைதல் நிச்சயம்' - என்பது கருத்து. 1224. குறிப்புரை: தென்னாட்டு அரண் - பாண்டி நாடாகிய கோட்டை; என்றது 'அவர்கள் யாராலும் வெல்ல இயலாத அளவு வலுப் பெற்றிருந்த இடம்' என்றபடி. அட்ட - அழித்த. "அரண் அட்ட" என்றது, 'அரண்போல வாழ்ந்த நிலைமையை அழித்த' என்றபடி. "சிங்கம்" என்றது ஏகதேச உருவகம் ஆதலின், 'அருகராகியயானைகளது' என உரைக்க. 'திருவாயால்' என மூன்றாவது விரிக்க. "ஆணை" என்றது காதற் சொல், "காண்க" என்பதும், 'காண்' என்பதுபோல அசை. யமாலயம் - எமன் உலகம்.
|