பக்கம் எண் :

85சேத்திரத் திருவெண்பா

156.

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.

12

157.

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.

13


மொழி1. ஆ ஆ - அழுகை ஒலிக் குறிப்பு. தென் ஆனைக் கா - தென்னாட்டில் உள்ள ‘திருஆனைக்கா’ என்னும் தலம். சோழ நாடு. 

156. அ. சொ. பொ.: ‘ஒத்து இருண்ட குஞ்சி’ என்க. ‘குயில் ஒத்து இருண்ட’ என்பதனோடு இயைய, ‘கொக்கு ஒத்து வெளுத்து’ என்பது வருவிக்க. பயில - அடிக் கடியாக. முதுமையில் கோழை மிகுதலால், இருமல் அடிக்கடி யெழுவதாம். புன்னையங் கானல் - புன்னைமரங்கள் மிக்குள்ள கடற்கரை. மயிலை - மயிலாப்பூர். இது தொண்டை நாட்டுத் தலம். இஃது இங்குள்ள திருக்கோயிலைக் குறித்தது. இக்கோயில் ‘கபாலீச்சரம்’ என்னும் பெயருடையது. 

மட்டிட்ட புன்னையங் கானல் டமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்.2

என்னும் அற்புதத் திருப்பதிக அடிகளைக் காண்க. பின்னை, யாதும் இயலாத இறுதிக்காலம். அங்காந்து - (துயரத்தால்) வாயைத் திறந்து கொண்டு (உயிர் போய்விட,) ‘இரு - காண் போர் இரங்கக் கிட’ என்றபடி. ‘இப்பொழுதே சிந்திப் பாயாயின் இந்நிலைவாராது’ என்பது குறிப்பு.

157. அ. சொ. பொ.: “ஈளையர்கள்” என்றது, முதுமை யெய்தினமையைக் குறிப்பால் உணர்த்தியது. பூளை - பூளைப் பூ. இது வெண்ணிறம் உடையது. பொங்குதல், படியாது விரிதல் சூளையர்கள் - எரிகொளுவச் சூழ்ந்திருப்பவர்கள், ஓகாளம் செய்தல், அருவருப்பால், முன் உண்டதைக் கக்குதல். உஞ்சேனை - உச்சயினி; இது வடநாட்டில் உள்ள ஒரு நகரம். இதன்கண் உள்ள கோயிலும் ‘மாகாளம்’ எனும் பெயரினது. இஃதொரு வைப்புத் தலம். “நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்”3 “உஞ்சேனை மாகாளம் ஊறல் ஒத்தூர்”4 என்னும் தேவாரத் திருமுறைகளைக் காண்க. 


1. தொல் - சொல் - கிளவியாக்கம் - 56.

2. திருமுறை - 1.47.1.

3. திருமுறை - 2.39.9

4. திருமுறை - 6.70.8