பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை86

158.

இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.

14

159.

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது, பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.

15

160.

இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச்
சட்டவொரு முட்டைநெய் தான்கலந்(து) - அட்ட
அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.

16


158. அ. சொ. பொ.; இல் - இல்லாள். மனை - இல்லம். சொல் - இறந்தமை பற்றி இரங்கிச் சொல்வனவும், தேற்று வனவும். துடிப்பு, வந்து கண்டு நீங்குவதில்’ உள்ள கடமை யுணர்ச்சி. கிளை - சுற்றம். கிற்றியே - இதனை அறிய வல்லாயோ? ஏகாரம் வினாப் பொருட்டு. வாழ் முதலாகக் கருதியிருந்த பொருள்களுள் ஒன்றேனும் (உடன் வருவதில்லை) என்பது கருத்து. ‘கிற்றியேல் வாழ்த்து’ என்பது குறிப்பு. ‘கிற்றி யேல்’ என்றே பாடம் ஓதுதலும் ஆம். வளைகுளம் ஒரு வைப்புத் தலம்.

159. அ. சொ. பொ.: அஞ்சனம் - மை மையெழுதிய கண்ணார், மகளிர். பதம் - நிலைமை. ‘வெளுத்து’ ‘வெளுக்க’ எனத் திரிக்க. ‘அருவருக்கப்படுவதும் உடலமே’ என்க. கோடுதல் - வளைதல்; கூன் விழுதல், கூடப்படுங் காடு சுடுகாடு. புலம்புதற்கு, ‘பலர்’ என்னும் எழுவாய் வருவிக்க. காடுபோய்க் கூடிவிட, பின்னர்ப் பலர் இருந்து புலம்பாமுன்’ என்க. ‘பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு’ எனக் கொள்க.

160. அ. சொ. பொ.: முட்டை, முட்டை வடிவமாக எண்ணெய் முகப்பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. ஒரு முட்டையளவான விளக்கெண்ணையை இருநாழியளவு நீரிற் கலந்து, அதனை ஓர் உழக்களவாகச் சுவறக் காய்ச்சி யெடுத்ததை ‘உடலுக்கு நல்லது’ என ஊற்றப் பிறர் முயலுவர். அட்ட - காய்ச்சி எடுக்கப்பட்ட. அருவாய்ச் சாறு - அரிய சாறு; கசாயம். வாய் - வாயில் ஊற்றத் தக்க. “சாறு” என்பதன் பின், ‘குடியுங்கள்’ என்பது வருவிக்க. என்று சொல்லி அழுபவர்கள், சுற்றத்தார், திருப்பாச்சில் ஆச்சிராமம் சோழ நாட்டுத் தலம்,