பக்கம் எண் :

869ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1261.பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே.

80

1262.வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து) ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல் மலர்க திருக்கண்களே.

81

1263.கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர் கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன் தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை யேத்தார் வருந்துவதே.

82

 

1261. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை. 'நேடிய' என்பது பாடமன்று. ஞானசம்பந்தர் பழங் காசுபெற, நாவுக் கரசர் நல்ல காசு பெற்றமை பற்றி, "பூந்திருநாவுக்கரசு" என்றார். பூ - அழகு. அவர் பெற்ற காசின் அழகு அவருக்கு ஆக்கிச் சொல்லப்பட்டது. "இக்குவலயம் உளதாய்த்து" என்றது, 'உயிர்கள் பஞ்சத்தால் வாடி மடியாமல் வாழ்ந்தன' என்றவாறு.

1262. இப்பாட்டு, புதல்வனை வாயிலாகப் பற்றி வந்த தலைவனைத் தலைவி வாயில் மறுக்கத் தோழி வாயில் வேண்டியது.

'நீதி கெட்டார்.... வாள் நுதல்! ஊரனைத் தோள்மிசை மழவு ஏற்றி மனைப்புறத்துக் கண்டது எத்தனைப் பொழுதோ! திருக்கண்கள் முன்போல் மலர்க' எனக் கூட்டி யுரைக்க. வலையம் - வாகு வலயம்; தோள்வளை. மழவு - புதல்வன். மனைப்புறம் - புறங்கடை. நிலை - நிற்றல். 'நிற்றலில் கண்டது' என ஏழாவது விரிக்க. "எத்தனைப் பொழுதோ" என்றது, 'மிக நீண்ட நேரம்' என்றபடி. 'தலைவர் இத்தன்மையராகவும் சிவப்பு ஆறாமை குல மகளிர்க்கு அழகன்று; உனது அழகிய கண்கள் சிவப்பு ஆறி, முன்போல் குளிர்ச்சியுடன் மலர்வன வாக' என்பதாம். நீதி கெட்டான், சமணர். குலைய - அழிய 'அவரைக் கழுக் குழுவிற் கண்டவன்' என்க.

1263. குறிப்புரை: கண் ஆர் திருநுதலோன், சிவபெருமான். கோலக் கா, சீகாழியை அடுத்துள்ள தலம். நொடி - நொடித்தல்;