1279. | மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமணைப் பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினையறுக்கும் கண்ணைக் கதியைத் தமிழா கரனை,யெங் கற்பகத்தைத் திண்ணற் றொடையற் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே. | | 98 | 1280. | சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யானுரைத்த பேருந் தமிழ்ப்பா வினவவல் லவர்பெற்ற வின்புலகங் காருந் திருமிடற் றாயரு ளாயென்று கைதொழுவர் நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே. | | 99 | 1281. | பிரமா புரம்வெங் குரு,சண்பை, தோணி, புகலி,கொச்சை சிரமார் புரம்,நற் புறவந், தராய்,காழி, வேணுபுரம் வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க பரமார் கழுமலம் பன்னிரு நாமமிப் பாரகத்தே. | | 100 |
.- ஒரு சீராக அமைக்கப்பட்ட பூமாலை. கற்பு உடை வாய்மொழி - கற்ற கல்வியை யுடைய வாயினின்றும் தோன்றும் சொற்களால். ஏத்தும் படி - துதிக்கின்ற முறையில். கதறிட்டு இவர - அலைகள் முழங்கிக் கொண்டு கரைமேல் ஏறுதலால். மல் படு தொல்லைக் கடல் - முத்து முதலிய செல்வங்கள் மிகுகின்ற பழைய கடல். 1279. குறிப்புரை: அமண் - அமணர் குழாம். பண்ணைக் கழு - நிறைய நாட்டுப்பட்ட கழுமரம். கண் - கண்போன்றவர். கதி - யாவராலும் அடையப்படுபவர். திண்மை - நெருக்கம். தொடையல் - பூமாலை. சேர்ந்தனம் - புகலிடமாக அடைந்தோம். 'இனி எமக்கு யாது குறையுளது' என்பது குறிப்பெச்சம். 1280. குறிப்புரை: '-திருஞானசம்பந்தரை யான் துதிப்பாடிய இந்தத் தமிழ்ப் பாடலை ஓதி உணர்ந்தவர் பெற்ற பேரின்ப உலகத்தை எமக்கு அருள் கூர்ந்து அளித்தல் வேண்டும் - என் மாலும் பிரமனும் நீரும், மலருங் கொண்டு. சிவபெருமானைக் கும்பிடுவர்' - என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். எனவே, இப்பாட்டு இப்பிரபந்தத்தின் பயன் கூறிற்றாம். காரும் - கறுத்த. பேரும் பா - தொடர்ந்து நடக்கும் பாட்டுக்கள். 1281. குறிப்புரை: சிரமார் புரம் - சிரபுரம், தராய் - பூந்தராய். வரம் - மேன்மை. பரம் - மேன்மை. 'திருஞானசம்பந்தன் வரம் ஆர் பொழிற் பதிக்கு இப்பாரகத்துப் பன்னிருநாமம் பிரமாபுரம்.... கழுமலர்' என முடிக்க. இப்பாட்டின் இறுதிச்சீர் - இதன் முதற்பாடலிற் சென்று மண்டலித்தல் காண்க.
|