பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை884

வெண்பா

1295.அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற - வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.

2

கட்டளைக் கலித்துறை

1296.என்று மடியவ ருள்ளத் திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே.

3

அகவற்பா

1297.அடுசினக் கடகரி யதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனால்
 

தொழிற் பெயர். மாழை நோக்கி - மாவடுப்போன்ற கண்களை யுடையவள். 'புதல்வனது பாடல்' என ஆறாவது விரிக்க. கை விளித்தல் - கையால் அழைத்தல். "கூற்றத்தைக் கையால் விளித்தாற்றால்" என்றது காண்க1. இது நிலைமண்டில ஆசிரியப் பா இதனுள் எண்ணலங்காரம் வந்தது.

1295. குறிப்புரை: 'சம்பந்தன் தாளிணைகள் என்றும் என் தலையின் மேல் இருக்க' என முடிக்க. 'என்றும்' என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. அடுத்த பாடல், "என்றும்" எனத் தொடங்குதல் காண்க. சீர் - புகழ்.

1296. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை. கலி - வறுமை; இன்மை. ஒண்மை - ஒளி, ஞானம். "ஒண் கலி"என்றது, 'ஒண்மையின் கலி' என்றபடி. அஃதாவது ஒண்மையைக் கெடுக்கும் கலி. பொன்றுதல் - அழிதல். "பொன்றும்" என்பது 'பொன்றல்' என்பது 'வி' என்னும் பிறவினை விகுதி தொக்கு நின்றதாகக் கொள்ளல் வேண்டும். "குடி பொன்றிக் - குற்றமும் ஆங்கே தரும்2 என்பதிற்போல என்றார் மாதவச் சிவஞான யோகிகள்3.

1297. குறிப்புரை: "ஞானசம்பந்தன் இந்நானிலத்திடை" என்பதை முதலிற் கொள்க. 'ஞாலத்திடை' என்பது பாட மன்று


1. திருக்குறள் - 894.
2. திருக்குறள் 171.
3. தொல்காப்பியப் பாயிர விருந்து.