| கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில் தேமரு தினைவளர் காமரு புனத்து மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா மூரி மருப்பின் சீரிய முத்துகக் | 10 | கொடுஞ்சிலை வளைத்தே கடுஞ்சரந் துரந்து முற்பட வந்து முயன்றங் குதவிசெய் வெற்பனுக் கல்லது கணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே. | | 7 |
பதணம் - மேல்மாடத்து மேடை. 'மாளிகைப் பதணம்' என இயைக்க. பதணத்துக் கும்பம் - அம்மேடையின் மேல் அழகிற்குச் செயற்கையாகச் செய்யப்பட்ட குடம். (அதன்) உம்பர் - மேலே அம்புதம் திளைக்கும் பெருவளம் - மேகங்கள் தவழ்கின்ற மிக்க வளமையை. தழீஇ - தழுவி. திருவளர் - அழகு மிகுகின்ற. புகலி - சீகாழி. 'கவள யானை, திவளும் யானை' - எனத் தனித் தனி இயைக்க. கவளம் - யானை உணவு. திவளுதல் - அசைதல். 'யானையின் தலைபோலும் கும்பம்' என்க. கவுள் தலை - கன்னத்தை யுடைய தலை. யானையின் கன்னம் மத நீர் ஒழுக நிற்பது ஆதலின், அஃது எடுத்துக் கூறப்பட்டது. 'சம்பந்தன் சிலம்பில்' என இயையும். அலம்பு - மலை. அம் - அழகு. கருது இயம் செவ்விச் சுருதி - அறிஞர் விரும்புகின்ற வாச்சி யங்கள் இனிமை பெற எழுப்புகின்ற இசையை உடைய சிலம்பு. இவ் இசை வண்டுகளாலும், மூங்கில்களாலும் இசைக்கப் படுவன. 'செவ்வி பெற எழுப்பும் சுருதி' என, வேண்டும் சொற்களை இசையெச்சமாக வருவித்துக் கொள்க. 'சிலம்பிற் புனம்' - என இயைத்துக் கொள்க. தேமரு. தேன் + மரு. தேன் - இனிமை. காமரு - அழகிய. கைம் மா - யானை. மூரி - பெரிய; வலிய. மருப்பு - தந்தம். உக - சிந்தும் படி. "முற்பட வந்து" என்பதை, "புனத்து" என்பதன் பின்னர்க் கூட்டுக. வெற்பன் - குறிஞ்சி நிலத் தலைவன். சுணங்கு அணி - தேமலைக் கொண்ட. "புகலித் தலம் விளங்கப் பிறந்த சம்பந்தனது மலையில் தினை வளர் புனத்து (ஒருநாள் எங்கள்மேல் யானை வந்த பொழுது) முன் வந்து சில வளைத்துச் சரம் துரந்து முயன்று அங்கு உதவி செய்த வெற்பனுக்கு அல்லது பிறருக்கு நும் மகளை மணம் செய்து கொடுக்க எண்ணுவது நம் எல்லோர்க்கும் வலிய பழியாய் முடியும்" என்பதாம். 'அவ்வாறு செய்ய முயன்றால் தலைவி இறந்துபடுவாள்' என்பது கருத்து.
|