அகவற்பா 1303. | தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத் தாடக மாடம் நீடுதென் புகலிக் காமரு கவினார் கவுணியர் தலைவ | 5 | பொற்பமர் தோள நற்றமிழ் விரக | 10 | மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ(று) ஆதரித்(து) இறைஞ்சிய பேதையர் கையில் வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின் பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. | | 10 |
மேதி - வயல்களின் பக்கம் மேய்தற்கு வருகின்ற எருமை. "வயல்" என்பதன்பின், 'புடை' என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க. கனையா - கனைத்து; ஒலி யெழுப்பி. கன்றுக்கு - உடையவனிடத்திலே கட்டுண்டிருக்கும் தனது கன்றை நினைந்த காரணத்தால். 'நனைய' என்றதன் இறுதி நீட்டல் பெற்றது. 'எச்சத் திரிபு' என்றலும் ஆம். 1303. குறிப்புரை: இதுவும் புறப்புறக் கைக்கிளை. தனம் மலி - பொருளை நிரம்பத் தருகின்ற, திரு - இலக்குமி. 'அவள் திளைக்கும் மாடம், இன்பத்து மாடம், எனத் தனித்தனி இயைக்க. திளைத்தல் - இன்பம் உற்று இருத்தல். வீயா - அழியாத. ஆடகம் - பொன். நீடு - உயர்ந்திருக்கின்ற. தென் - அழகு. புகலி - சீகாழிப் பதி. 'புகலிக் கவுணியர்' என இயைக்க. காமரு - விரும்பப்படுகின்ற. கவின் ஆர் - அழகு நிறைந்த (தலைவன்). கவுணியர் - கவுணிய கோத்திரத்தவர். தலைவன் - சிறந்தவன். பொற்பு - அழகு. நற்றமிழ் - ஞானத் தமிழ். விரகன் - வல்லவன். ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் கூறுவோர் "மலைமகள் புதல்வ" - என்பதற்கு 'முருகன்' எனப் பொருள் கொள்வர். அம்மையது திருமுலைப் பாலை பொருந்துவதே. பயிலுதல் - பல முறையும் சொல்லுதல். ஆதரித்து - விரும்பி. "பேதையர்" என்பது பொதுப் பொருட்டாய். 'மகளிர்' எனப் பொருள் தந்தது. வெள் வளை - சங்க வளையல். "செம்பொன்" - என்பது உவமை யாகு பெயராய், அது போலும் தேமலைக் குறித்தது. காதல் மிகுதியால் உடல் மெலிய வளை களைதலும், உடம்பில் தேமல் தோன்றுதலும் இயற்கை. இவற்றை வாங்குதலும், கொடுத்தலுமாகக் கூறியது, ஏற்றுரை (இலக்கணை) வழக்கு.
|