பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை892

வெண்பா

1304.பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தொஃறோணி கண்டீர் - நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.

11

கட்டளைக் கலித்துறை

1305.ஞானத் திரளையி லேயுண் டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே.

12

 

சங்கினைப் பொன்னை விலையாகக் கொடுத்து வாங்குதலால், 'சிறுபிள்ளை' என்பது உண்மையாயிற்று என்பதாம். 'பிள்ளைமைப் பருவத்திற்றானே இத்துணைப் பேரழ குடையராய் இருந்தார்' என்பது கருத்து.

1304. குறிப்புரை: "பொன் மாலை மார்பன்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. "நிறை யுலகில்" என்பதை, "பிறவி" என்பதற்கு முன்னே கூட்டுக.

பிறவி - பிறத்தல். அது முடிவில்லாது வருதலால் பெரிய கடலாக உருவகிக்கப்பட்டது. ஞான சம்பந்தரது தமிழ் பிறத்தல் தொழில் வாராது போக்குதல் பற்றி அஃது அக்கடலைக் கடக்க உதவும் தோணியாக உருவகிக்கப்பட்டது. இஃது இயைபு உருவகம். பொல்லாமை - தீமை. 'துன்பத்தைத் தருவது' என்பது கருத்து. நீந்துதல் - கடத்தல். துறவு; பற்றுக்களை அறவே விடுதல். அவ்விடுதலை தருவதனை விடுதலாகவே கூறினார் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. தொல் + தோணி = தொஃறோணி. தொன்மை - பழைமை. 'ஞான சம்பந்தரது தமிழ் பொருளால் பழைமை யுடையது' - என்பது கருத்து. 'தோற்றோணி' என்பது பாடம் அன்று. கண்டீர்; முன்னிலை யசை. நிறை உலகு - உயிர்கள் நிறைந்துள்ள உலகு. பொன் மாலை, பிள்ளைகட்கு அணியப்படுவது, தன், சாரியை. 'சம்பந்தன்தன் தமிழ்' என்க. மாலைத் தமிழ் - கோவையாக (திருப்பதிகங்களாக)ச் செய்யப்பட்ட தமிழ். ஞானத் தமிழ் - ஞானத்தைத் தரும் தமிழ்; இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. தமிழ், அதனால் ஆகிய பாடல்களைக் குறித்த கருவியாகுபெயர்.

1305. குறிப்புரை: இதுவும் புறப் புறக் கைக் கிளை.