| சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித் தம்பந்தத் தீராதார் தாம். | | 14 |
தலங்கள்" என்றது, அதற்கு இனமாகிய மற்றை மணி, பொன் இவைகளையும் தழுவி நின்றமையின் உபலக்கணம். தலைவர் துயிலும் இடமாதல் பற்றி, "தலங்கள்" என்றார். முன் வைக்கற்பாலதாய இது செய்யுள் நோக்கி ஈற்றில் வைக்கப் பட்டது. வான் - பெருமை. தவம், உற்ற நோய் நோன்றலும், உயிர்க்கு உறுகண் செய்யாமையும் ஆகிய அவையேயாம். என்னை? 'நற்றவம்' என்றோ,1 "இறப்பில் தவம்" என்றோ சிறப்பியாது வாளா, "தவங்கள்" என்றமையின் "செய்து" என்பதனையும், "நீத்தாலும்" என்பதனோடு இயைய, 'செய்தாலும்' எனத் திரிக்க. "கலைத் தலைவன் சம்பந்தற்கு ஆளாய்.... தீராதார், தாம் முலைத் தலங்கள் நீத்தாலும், மலைத் தலங்கள் மீதேறி வான் தலங்கள் செய்தாலும் மூப்பர்' - என இயைத்து வினை முடிவு செய்க. மூப்பர் - முதுமையை எய்துவர். என்றது, 'பின் ஏனையோர் போலவே இறந் தொழிவர்' என்னும் குறிப்பினது. நிலையாமை யுணர்வு முதலிய காரணங்களால், 'எனது' என்னும் புறப் பற்றுக்களை விட்ட வழியும். பற்றற்றான் பற்றினைப் பற்றாதவழி,2 'யான்' என்னும் அகப் பற்று நீங்காமையால், 'ஏனையோர் போலவே இறப்பர்' - என்றார். ஞானசம்பந்தரை ஆசிரியராக அடைந்து அவர் சொல்வழி நில்லாதவர்க்கு, 'யான்' என்பது ஒழியாது - என்பது கருத்து. "-யான்- என்னும் செருக்காவது, தானல்லாத உடம்பைத் தானாகக் கருதும் மயக்கம்" என்றார் பரிமேலழகர்3. தன்னை உடம்பின் வேறாக உணர்தலும் பசுஞானமாவதல்லது, பதிஞானம் ஆகாமையால் அவ்வாறுணர்தல் 'யான்' என்பதினின்றும் நீங்கியது ஆகாது. மற்று, எல்லாச் செயல்களும் சிவன் செயலேயாக, அவற்றுள் சிலவற்றை "யான் செய்தேன்; பிறர் செய்தார்" - என மயங்கியுணர்ந்து விருப்பு வெறுப்புக்களைக் கொள்ளுதலே, 'யான்' என்னும் செருக்காகும். அச் செருக்கு, "எல்லாம் அவனே" என உணர்ந்து இறைவனைப் பற்றாதவழி நீங்குமாறில்லை. எனவே, இறுதியடியில் "தம் பந்தம்" என்றதில் 'பந்தம்' எனப்பட்டது, 'யான்' என்னும் அகப் பற்றையேயாயிற்று.
1. திருக்குறள் - 261. 2. திருக்குறள் - 350. 3. திருக்குறள் - 346 உரை.
|