பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை902

அகவற்பா

1315.புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சுர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகுநாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
5 பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்

கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே!யுறவலைகாண்நீ
நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழுமலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்

10தன்னருள்பெற்ற பொன்னணி குன்றம்

மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை

15ஏதிலன்பின்செல விலக்கா தொழிந்தனை

ஆதலின் புறவே யுறவலை நீயே.

22

 

1315. குறிப்புரை: இஃது அகப்பொருள். களவியலில் உடன் போக்கின்கண் செவிலி பின் தேடிச் செல்லுமிடத்துக் குரவொடு புலம்பல் பெரும்பான்மையாகச் சிறுபான்மை வரும் புறவொடு புலம்பலாகச் செய்யப்பட்டது. புறவு - புறா; இது பாலை நிலப் பறவை.

வறத்தல் - வற்றுதல். வறந்த - வறந்தமையால். புல், தரையிற் பரவிய புற்கள். முளி - உலர்ந்த.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது1

என்றது காண்க. சரம் உரீஇ - அம்பு பட்டு உருவியதனால். படு கலை - இறந்த ஆண் மான். மானை வேட்டையாடிய வேடர், அதன் குளம்பை 'பயன் இல்லது' என போகட்டுப் போதலின், அது வெயிலால் உருகி மிகத் தீ நாற்றத்தை உண்டாக்கிற்று என்க. 'நாற்றத்தை யுடைய சுரம்' என்க. ஆடும் அரவு - படம் எடுத்து ஆடும்


1. திருக்குறள் - 16.