20. | கூந்தற் கமுகும், குளிர்பாட லத்(து) எழிலும் | | வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும், - ஏந்தெழில்ஆர் |
21. | மாதவியும், புன்னையும் மன்னும் மலர்க்குரவும், | | கேதையும் எங்கும் கெழீஇப் - போதின் |
22 | இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம் | | வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந் தெங்கும் |
23. | ஆலை ஒலியும், அரிவார் குரல்ஒலியும், | | சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும், - ஆலும் |
24. | அறுபதங்கள் ஆர்ப்பொலியும், ஆன்றுபொலி வெய்தி | | உறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும் |
25. | நந்தா வனத்தியல்பும், நற்றவத் தோர் சார்விடமும் | | அந்தமில் சீரார் அழகினால் - முந்திப் |
26. | புகழ்வாரும் தன்மையவாப் பூதலத்துள் ஓங்கி | | நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப, நேரே - திகழ |
கண்ணி - 20 கமுகுகளில் ஒருவகை கூந்தற் கமுகு; ‘கூந்தற் பனை’ என்பதுபோல. இளங் காவைக் கூறியபின், பெருமாச் சோலை சொல்லப்படுகின்றது. (கண்ணி - 21, 22) இதில் பாதிரி, (பாடலம்) சண்பகம், மாதவி, (குருந்து) புன்னை, குரா இம்மரங் களுடன் தாழையும் சொல்லப்பட்டது. கேதகை - தாழை. இது ‘கேதை’ என மருவிற்று. கெழீஇ - பொருந்தி. இவைகளைத் திணை மயக்கமாகக் கொள்க. போதின் - உரிய நேரத்தில். வார் பொழில் - நீண்ட சோலை; பெருமரச் சோலை. மாடு - பக்கம். கண்ணி - 23, 24 பல வகை ஒலி யெழுதல் கூறப்படுகின்றது. ஆலை - கரும்பாலை. அரிவார் - நெல் அரிபவர். ஆலும் - பறந்து அசைகின்ற. அறு பதங்கள் - ஆறு கால்களையுடைய வண்டுகள். ஆன்று - நிறைந்து. பொலிவு - விளக்கம். வேலை - கடல். “வேலை ஒலிப்ப” என்பது, ‘வேலை போல ஒலிப்ப’ என வினை யுவமத் தொகை. வெறி - நறுமணம். கண்ணி - 25 புற நகர்ச் சிறப்பு:- ‘நந்த வனம்’ என்பது நீட்டல் பெற்றது. நந்த வனம் - பூந்தோட்டம். நற்றவத் தோர் சார்வு இடம் - தபோ வனம். அந்தம் - முடிவு சீர். ஆர் அழகு - சிறப்பு நிறைந்த அழகு. (கண்ணி - 26) வார்தல் - நீளுதல். தன்மையஆ - (நந்த வனமும், தபோவனமும்) இத்தன்மையால் இருக்க. “பூதலத்துள் ஓங்கி” என்பதை, “திகழ” என்பதன் பின்னே கூட்டுக. கிடங்கு - அகழி.
|