| 45. | ஆரணங்கும், மற்றை அருந்ததியும் போல்மடவார் | | ஏரணங்கு மாடத் தினிதிருந்து, - சீரணங்கு |
| 46. | வீணை பயிற்றுவார், யாழ்பயில்வார், மேவியசீர்ப் | | பாணம் பயில்வார், பயன்உறுவார், - பேணியசீர்ப் |
| 47. | பூவைக்குப், பாட்டுரைப்பார், பொற்கிளிக்குச் சொற்பயில்வார், | | பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா - ராய் எங்கும் |
| 48. | மங்கையர்கள் கூட்டமும், மன்னு சிறார்குழுவும் | | பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய |
| 49. | வேத ஒலியும், விழாஒலியும், மெல்லியலார் | | கீத ஒலியும், கிளர்ந்தோங்கும் - மாதரார் |
| 50. | பாவை ஒலியும், பறைஒலியும், பல்சனங்கள் | | மேவும் ஒலியும், வியன்நகரங் - காவலர்கள் |
“தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றுவர்” என்பனபோல, “சீகாழி நானூற்றுவர்” என்றல் மரபு எனத் தெரிகின்றது. கண்ணி - 45 - 47 சீகாழியில் உள்ள மங்கையர்களது சிறப்பு. நா மன்னும் ஆரணங்கு - நாமகள்; கலைமகள். கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க. ஏர் - எழுச்சி. அணங்கு - அழகு சீர் அணங்கு - சிறப்பினையும், அழகினையும் உடைய. வீணையும், யாழும் வேறுவேறு ஆதலை. “இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்”1 என்றதனானும் அறிக. பாணம் - நாடக வகை. பூவை - நாகணவாய்ப் புள். இக்காலத்தில், ‘மைனா’ எனப்படுகின்றது. பாவை - பதுமை. பண்பு உறுவார் - அழகு பார்ப்பார். கண்ணி - 48: “மன்னு” என்பதை, “எங்கும்” என்பதன் பின் கூட்டுக. சிறார் - சிறுவர் இனம் பற்றி இங்குச் சிறுமிய ரையும் கொள்க. ‘கூட்டமும், குழுவும் ஆக’ என ஒரு சொல் வருவிக்க. (மேல் கண்ணி - 23, 24ல் புற நகர் ஒலிகள் கூறப்பட்டன.) கண்ணி - 49 - 52-ல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன. ‘வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது’ என்க. (கண்ணி - 48)
1. திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி
|