பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை92

171.

கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல,

ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண் கொன்றையந் தார்உருவப்

பெண்களங் கம்;இவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம்

பண்களங் கம்இசை பாடநின் றாடும் பரமனையே. 

3



சிவனது வடிவைக் கண்டவுடனே அவன்மேற் கரையிறந்த காதல் உடையனவாம்" என்பதையும், 'அதுபொழுது அவ்வான்மாவை அபக்குவான்மாக்கள் ஏசியும், இகழ்ந்தும் தம் வயப்படுத்த முயலும்' என்பதையும், 'எனினும் சிவன் தன்னைக் காதலித்த ஆன்மாவைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதலை ஒருவராலும் தடுக்க இயலாது' என்பதையும் இவ்வாறு அகப் பொருள்மேல் வைத்து அருளிச் செய்தவாறாக உணர்க. இதற்குக் கண்ணப்ப நாயனார் சிறந்த எடுத்துக் காட்டு. அதனையே மேற்காட்டிய சுந்தரர் திருமொழி குறிப்பால் உணர்த்தியது. பிச்சி - பித்துக் கொண்டவள். சகரயகரங்கள் ஒன்றற்கு ஒன்று எதுகையாய் வருதல் உண்டு.

171. பொழிப்புரை: இச்சிறுமியை, அழகிய கண்டத்தை யுடைய சிவன் வெறுக்கவும் இவள் அவன்மேற் கொண்ட காதலால், கண்கள் நீர் பொழிய, கை வளைகள் கழல, துகில் நெகிழ, அவனது கொன்றை மாலைபோலும் நிறத்தை எய்தியதுடன் அறியாமையுடைய மனம் பித்துக் கொண்ட வளாயினாள். இஃது இவளது பெண்மைக்குக் குற்றமாம்.

குறிப்புரை: இது சிவபிரானைக் காதலித்த தலைவி தன் தாய் கூற்று.

வீழப் படுவார் கெழீஇயலர், தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்.

என்றபடி, தம்மால் காதலிக்கப்பட்ட தலைவரால் தாமும் காதலிக்கப்பட்ட மகளிரன்றோ பெருமை யடைதற்கு உரியர்? இவள் அவ்வாறின்மையின் குற்றப்படுகின்றாள் - எனத் தாய் நொந்து கூறினாள் என்க. தீவிர பக்குவம் எய்தாத ஆன்மாவின் நிலைமையை இங்ஙனம் அகப்பொருள் முறையில் வைத்துக் கூறியதாக உணர்க. 'கண்கள் அங்கு அம் செய்ய' எனப் பிரிக்க. அம் - நீர். 'களக் கண்ணுதல்' என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. வேர்த்தல் - சிதைத்தல். அஃது இங்கு வெறுத்தலைக் குறித்தது. 'வேர்ப்பவும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக் கப்பட்டது. வேர்ப்பவும் ஓர் பேதை நெஞ்சம் அவனையே விரும்பிப் பேதுறுகின்றாள் என்பது பெண் களங்கம்' என இயைத்து முடிக்க. களங்கம் - குற்றம்.


திருக்குறள் - 1194