| 64. | ஞானச் சுடர்விளக்கை, நற்றவத்தோர் கற்பகத்தை | | மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆன சீர்த் |
| 65. | தத்துவனை, நித்தனைச் சைவத் தவர்அரசை, | | வித்தகத்தால் ஓங்கு விடலையை, - முத்தமிழின் |
| 66. | செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத், தெவ்வருயிர் | | அஞ்சத் திகழ்ந்த அடலுருமை, - எஞ்சாமை |
| 67. | ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் | | கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத், - தீதறுசீர்க் |
| 68. | காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும் | | மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத் |
| 69. | ‘திருஞான சம்பந்தன்’ என்றுலகம் சேர்ந்த | | ஒருநாமத் தால்உயர்ந்த கோவை, - வருபெரு நீர்ப் |
| 70. | பொன்னிவள நாடனைப், பூம்புகலி நாயகனை | | மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை, - முன்னே |
| 71. | நிலவு முருகர்க்கும், நீலநக் கர்க்கும் | | தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டர்க்கும் - குலவிய |
| 72. | தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை, | | மாழைஒண்கண் மாதர் மதனனைச், - சூழொளிய |
| 73. | கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில் | | வாதில் அமணர் வலிதொலையக், - காதலால் |
| 74. | புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு(து) அவரை | | வண்கழுவில் வைத்த மறையோனை, - ஒண்கெழுவு |
| 75. | ஞாலத் தினர்அழிய மன்னுநனி பள்ளியது | | பாலை தனைநெய்த லாக்கியும், - காலத்து |
| 76. | நீரெதீர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும் | | பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்தும், முன் - நேரெழுந்த |
கண்ணி - 64 - 85. ஞான சம்பந்தரது பெருமை. 64 - கற்பகம் வேண்டுவார் வேண்டுவதை வேண்டியவாறே கொடுக்கும் தெய்வ மரம். அஃது இங்கு உவம ஆகுபெயராய் வந்தது. கணவன் உயிரைப் பெற விரும்பிய வணிகப் பெண்ணிற்கு அதனை அங்ஙனமே வழங்கியது. அருமை மகளை இழந்து வருந்திய வணிகர்க்கு அவளை எழுப்பித் தந்தது முதலியவற்றை இங்கு நினைக்க. மானம் - பெருமை.
|